நடப்பு ஐபிஎல் சீசனில் சம்பியன் பட்டம் வென்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மழை அச்சுறுத்தலுக்கு மத்தியில் டக்வோர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே.
15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற இலக்கை சென்னை வெற்றிகரமாக எட்டியது. இறுதிப் போட்டியில் ரன் விரட்டலின் போது 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அசத்திய டேவன் கொன்வே, ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தச் சூழலில் 2023 சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது கொடுத்து அங்கீகரித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் சிறந்த கள செயல்பாடு என பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அடங்கும்.
வளர்ந்து வரும் வீரர்: நடப்பு சீசனில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை 21 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வீரர். நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி உள்ளார். 625 ரன்கள் பதிவு செய்துள்ளார். 1 சதம் மற்றும் 5 அரைசதங்கள் இதில் அடங்கும். 48.08 இவரது துடுப்பாட்ட சராசரி, ஸ்ட்ரைக் ரேட் 163.61. அதிகபட்சமாக 124 ரன்கள் எடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஒஃப் த சீசன்: நடப்பு சீசனில் 183.49 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் கிளென் மக்ஸ்வெல், சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை வென்றுள்ளார். அவர் 14 போட்டிகளில் விளையாடி 218 பந்துகளை எதிர்கொண்டு 400 ரன்கள் குவித்துள்ளார். 29 பவுண்டரி மற்றும் 31 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.
What an exceptional catch by Rashid Khan. pic.twitter.com/7NTPOEOZ2e
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 7, 2023
கட்ச் ஒஃப் த சீசன்: நடப்பு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் மேயர்ஸ் கொடுத்த கட்ச்சை அபாரமாக பிடித்த குஜராத் வீரர் ரஷித் கான் இந்த விருதை வென்றுள்ளார்.
ஒரேஞ்ச் கப்: ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் குவித்த வீரருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு சீசனில் இந்த விருதை சுப்மன் கில் வென்றுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில் 2 வது இடம் பிடித்துள்ளார். இந்த சீசனில் அவர், 17 ஆட்டங்களில் 890 ரன்கள் குவித்துள்ளார். 3 சதம், 4 அரை சதங்கள் இதில் அடங்கும். அவரது சராசரி 59.33. அதிகபட்சமாக 129 ரன்கள் குவித்துள்ளார். மோஸ்ட் வேல்யூயபிள் வீரர், கேம் சேஞ்சர் ஒஃப் த சீசன் விருதையும் கில் தான் வென்றுள்ளார்.
பேர்ப்பிள் கப்: நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக குஜராத் வீரர் ஷமி உள்ளார். 17 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 64 ஓவர்கள் வீசி 514 ரன்கள் வழங்கியுள்ளார். இந்த விருதுக்கான போட்டியில் ரஷித் கான் 27 விக்கெட்டுகளுடனும், மோஹித் சர்மா 25 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் இருந்தனர்.
ஃபேர்பிளே விருது: டெல்லி கபிடல்ஸ் அணி நடப்பு சீசனில் இந்த விருதை வென்றுள்ளது. 14 போட்டிகளில் விளையாடி 141 புள்ளிகளை பெற்று இந்த விருதை டெல்லி அணி வென்றது. இந்த விருதுகளுடன் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.