தமிழக அகதிமுகாமில் வசிக்கும் இலங்கை மாணவியின் உயர்கல்விக்கான செலவை, தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆணையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவி ரித்யுஷாவின் கல்விச் செலவையே பழனிவேல் தியாகராயன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அண்மையில் வெளியான பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்தவர் ரித்யுஷா.
இது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராயன் வெளியிட்டுள்ள பதிவில்-
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்த ஆணையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவி ரித்யுஷாவைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் வாயிலாகத் தெரிந்துக் கொண்டேன்.
அம்மாணவியை இல்லத்திற்கு அழைத்து வாழ்த்தும்போது “படிக்க வசதியில்லை; ஆன்லைன் மூலம் கல்வி கற்க உள்ளேன்”, என அம்மாணவி தெரிவித்ததால், நேரடியாகக் கல்லூரியில் சேர்ந்து கற்பதன் அவசியத்தைக் எடுத்துக் கூறியதோடு, மதுரை லேடி டோக்(Lady Doak) கல்லூரி முதல்வரிடம் அம்மாணவியின் மேற்படிப்பு செலவு முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் எனவே அவர் படிக்க விரும்பும் துறையில் இடம் தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன்.
தற்பொழுது லேடி டோக்(Lady Doak) கல்லூரி முதல்வர் அம்மாணவிக்குச் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் இடம் ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.