ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் அதிரடி காரணமாக 150 ரன்கள் இலக்கை 14வது ஓவரிலேயே எட்டி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய அதன்படி, துடுப்பாட்டம் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியின் முன்னணி வீரர்கள் பலரும் சொதப்ப, வெங்கடேஷ் அய்யர் மட்டும் பொறுப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது சுழலால் கொல்கத்தா வீரர்களை திணறடித்தார். அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ்க்கு ஜோஸ் பட்லர் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனாலும், மற்றொரு ஓபனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மரண அடி அடித்தார். இதனால், ராஜஸ்தான் 150 ரன்கள் இலக்கை, 14வது ஓவரின் முதல் பந்திலேயே எட்டியது.
மைதானத்தின் நாலாபக்கமும் கொல்கத்தாவின் பந்துவீச்சை சிதறடித்த ஜெய்ஸ்வால் 13 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 98 ரன்கள் குவித்தார். முன்னதாக, 13 பந்தில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிகவேக அரைசதம் இதுவாகும். அரைசதம் எட்டும் முன் ஹட்ரிக் பவுண்டரிகளை விளாசி 12 பந்துகளில் 49 ரன்களை எட்டிய 13வது பந்தில் சிங்கிள் எடுத்து அரைசதம் பதிவு செய்தார்.
அவருக்கு பக்கபலமாக இருந்த கப்டன் சஞ்சு சாம்சன் 5 சிக்ஸர்கள் விளாசியதுடன் 48 ரன்கள் சேர்த்தார். இதனால் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 13.1 ஓவரிலேயே 151 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த சில போட்டிகளாக வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியைச் சந்தித்த ராஜஸ்தான் இந்த வெற்றியின் மூலம் அந்த சோகத்துக்கு முடிவுகட்டியது. மேலும், புள்ளிப்பட்டியலிலும் தலா 6 வெற்றி, 6 தோல்விகளுடன் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது அந்த அணி.