ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் இலக்கை 13.1 ஓவரிலேயே சேஸ் செய்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றிபெற்றது. இவ்வளவு விரைவான வெற்றிக்கு காரணமாக இருந்தது ராஜஸ்தானின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டமே.
ஜோஸ் பட்லர் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனாலும், மற்றொரு ஓபனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மரண அடி அடித்தார். மைதானத்தின் நாலாபக்கமும் கொல்கத்தாவின் பவுலிங்கை சிதறடித்த ஜெய்ஸ்வால் 13 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 98 ரன்கள் குவித்தார்.
இன்னிங்ஸின் முதல் ஓவரை கொல்கத்தா கப்டன் நிதிஷ் ராணா வீசினார். நிதிஷின் இந்த முடிவு மரணத்துக்கு சமமானது என்பதை நிரூபிக்கும்விதமாக ஜெய்ஸ்வாலின் பேட்டிங் அமைந்தது. முதல் பந்தே சிக்ஸருக்கு பறக்கவிட்ட அவர், அந்த ஓவரில் மட்டும் 6,6,4,4,2,4 என 26 ரன்கள் எடுத்தார். இரண்டாம் ஓவரில் பட்லர் ரன் அவுட் ஆகிச் சென்றாலும் கடைசி இரண்டு பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார்.
ஜெய்ஸ்வாலின் அதிரடியை நிறுத்த ஷர்துல் தாகூரை அழைத்தார் நிதிஷ் ராணா. யார் வந்தாலும் எனது வெறியாட்டம் நிற்காது என்பதுபோல ஜெய்ஸ்வால் ஆடினார். ஷர்துலின் ஓவரில் முதல் பந்தை சந்தித்த சஞ்சு சிங்கிள் எடுத்த ஸ்டிரைக்கை ஜெய்ஸ்வாலிடம் கொடுக்க, அடுத்த மூன்று பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரிகளை வெளுத்து 12 பந்துகளில் 49 ரன்களை எட்டினார். 13வது பந்தில் சிங்கிள் எடுத்து அரைசதம் பதிவு செய்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிகவேக அரைசதம் இதுவாகும்.
ஜெய்ஸ்வாலின் இந்த இன்னிங்ஸை பார்த்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். அவர் இன்னிங்ஸை விளையாடி கொண்டிருக்கும்போதே விராட் கோலி, ‘சமீபத்தில் நான் பார்த்து வியந்த மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. யஷஸ்வி, ஒரு பெரும் திறமைசாலி’ என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார்.
சூர்யகுமார் யாதவ்வோ, ‘மிகச்சிறப்பான இன்னிங்ஸ். மிகச்சிறப்பான வீரர். தலைவணங்குகிறேன்’ என்று ஜெய்ஸ்வாலை டேக் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, ‘இந்தளவுக்கு ட்ராமா நிறைந்த 3 ஓவர்களை நான் பார்த்ததே இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.