இலங்கையில் மூன்று திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கையர்களுக்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், சூரிய சக்தி திட்டம் மற்றும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பது ஆகிய மூன்று அவசர வேலைத்திட்டங்களாகும்.
ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பான பணிகள் தற்போது மும்முரமாக உள்ளதாகவும், விரைவில் அது ஆரம்பிக்கப்படும் எனவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வடக்கில் மூன்று தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதனை விரைவில் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் ராமேஸ்வரம் மற்றும் தலை மன்னார் இடையே படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காலைக்காலுக்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகளை விரைவில் தொடங்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.