28.6 C
Jaffna
December 22, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

80களில் போராளிகள் இடித்த விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரையாக முளைத்த கதை: யார் செய்த தவறால் விகாரை முளைத்தது தெரியுமா?

வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை சுற்றி நடக்கும் போராட்டமே இன்று பரபரப்பாக பேசப்படும் விடயமாகியுள்ளது.

விகாரை கட்டப்பட்டு, கலசம் வைக்கப்பட்ட சம்பவமெல்லாம் பல காலத்தின் முன்னரே முடிந்து விட்டது. இதனால் விகாரை கட்டப்பட்டது தமிழர்களுக்கும், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளுக்கும் பிரச்சினையல்ல. தையிட்டியில் விகாரை கட்டப்படுவது இரகசியமாக- யாருக்கும் தெரியாமல் நடந்த விவகாரமல்ல.

அது ஊருக்கே தெரிந்த விடயம். ஊடகங்களுக்கும் தெரிந்த விடயம். செய்திகளை படிக்கும் மக்களுக்கும் தெரிந்த விடயம்.

யாழ் மாவட்டத்திலேயே உயரமான விகாரையென்ற பில்டப் தொடங்கி… அதை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் நேற்று (3) தொடங்கிய பின்னர், அதை பொலிசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டதை தொடர்ந்தே பரபரப்பாகியுள்ளது.

வலி வடக்கு பிரதேசசபையே குற்றவாளி

நன்றாக கவனிக்கவும். விகாரை கட்டப்பட்டது இரகசியமல்ல. அது ஊருக்கும் தெரியும். ஊடகங்களுக்கும் தெரியும். செய்தி படிப்பவர்களுக்கும் தெரியும். தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் தெரியும்.

இந்த இடம்தான் இப்பொழுது பலராலும் சுட்டிக்காட்டப்படும் விடயமாகியுள்ளது. விகாரை கட்டப்பட ஆரம்பித்த போதே, தமிழ் தரப்பினால் மிக சுலபமாக தடுத்து நிறுத்த வாய்ப்பிருந்தும், அதை செய்யாமல் இப்பொழுது, விகாரைக்கு முன்பாக உண்ணாவிரதமிருக்கிறோம். சிறிலங்கா பொலிசார் இப்படி அட்டூழியம் புரிகிறார்களே… இந்த நாட்டில் தமிழர்களிற்கு சம அந்தஸ்தில்லையா என செய்திகளை படித்தும், வீடியோக்களை பார்த்தும் சமூக ஊடகவாசிகள் பொருமிக் கொண்டிருக்கிறார்கள்.

யுத்தத்தை வெற்றிபெற்றதாக நினைக்கும் இராணுவம்… எதையும், எப்படியும் செய்யலாமென நினைக்கும் இராணுவம்… பௌத்த மத அடையாளங்களை நாடு முழுவதும் எற்படுத்துவதை நோக்கமாக கொண்ட அரச இயந்திரம்… இலங்கை சிங்களவர்களின் பூர்வீக நாடு என கருதும் இனம்- அப்படித்தானே நடப்பார்கள். வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் விகாரை கட்டுவார்கள். இன மேலாதிக்க உணர்வுள்ள தரப்புகளெல்லாம் அதை செய்யும்.

நமது நிலங்களை பாதுகாக்க வேண்டுமென்ற கூட்டு பொறுப்புணர்வு தமிழ் தரப்பிடமே இருந்திருக்க வேண்டும். அப்படியிருந்திருந்திருந்தால், தையிட்டியில் விகாரை அமைக்காமல் தடுத்திருக்க முடியும்.

தையிட்டியில் சட்டவிரோதமாக, தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் அடாத்தாக விகாரை அமைக்கப்பட்டது- வலி வடக்கு பிரதேசசபையின் மெத்தனமான போக்கினாலேயே. வலி வடக்கு பிரதேசசபை சிறிதேனும், செயல்திறனாக… நிலங்களை பாதுகாக்க வேண்டுமென்ற விழிப்புடன் இருந்திருந்தால், இந்த நிலைமையேற்பட்டிருக்காது.

என்றாலும், வலி வடக்கிலுள்ள சில உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் அக்கறையுடன் இருந்துள்ளனர். அவர்களின் அக்கறையினாலேயே, விகாரை விவகாரத்தில் வலி வடக்கு பிரதேசசபை எங்கே சறுக்கியது என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ள முடிகிறது.

விகாரையும் பின்னணியும்

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள ரஜமஹா விகாரைக்கான பணிகள் 2018ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.  அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காங்கேசன்துறை துறைமுக திறப்பு விழாவுக்கு வந்த சமயத்தில், விகாரைக்கு அடிக்கல் நாட்ட வருவார் என கூறப்பட்டது. என்றாலும், நேர நெருக்கடி ஏற்பட்டதால் மைத்திரி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கவில்லை. அப்போதைய ஆளுனர் ரெஜினோல்ட் குரே அடிக்கல் நாட்டினார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மைத்திரி அடிக்கல் நாட்டிய இடத்தில் இந்த விகாரை கட்டப்படவில்லை. அதற்கு அண்மையாக உள்ள கிட்டத்தட்ட 2 ஏக்கர் நிலத்தில் இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. அது 8 பேருக்கு சொந்தமான தனியார் காணி.

அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் 1980களின் நடுப்பகுதி வரை சிறியளவிலான விகாரையொன்று இருந்தது. எனினும், அது தொன்மையான விகாரையல்ல. 20 பரப்பு காணியில் அந்த விகாரையிருந்தது.

சிங்கள தனிநபர் ஒருவரினால் நயினாதீவு, காங்கேசன்துறை விகாரைகளிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் அந்த விகாரையிருந்தது. அந்த இடம் சிங்களவர் பூர்வீகமாக வாழ்ந்த காணியுமல்ல. வெளிப்படுத்தல் உறுதியின் மூலமே குறிப்பிட்ட சிங்கள நபர் அந்த காணியை உரிமை கோரியிருந்தார்.

அந்த விகாரையை 1980களின் நடுப்பகுதியில் புளொட் இயக்கத்தினர் உடைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அந்த காணியிலும் மக்கள் குடியிருந்தனர். இதன்பின்னர் 1990களில் இடப்பெயர்வுடன் அனைத்து மக்களும் பிரதேசத்தை விட்டு வெளியேறினர்.

யுத்தத்தின் பின் மக்கள் மீளகுடியமர்ந்த போது, முன்னர் விகாரையிருந்த காணியிலும் மக்கள் குடியிருந்தனர். அந்த குடும்பத்துக்கும் குழாய் கிணறும் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அது தமது காணியென பிக்குகள் உரிமைகோரியதையடுத்து, மாவட்ட செயலகத்தினால் அந்த காணியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, பிக்குகளிடம் வழங்கப்பட்டது.

அந்த காணியிலேயே விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. என்றாலும், அதற்கு அண்மையாக உள்ள தனியார் காணிகளிலேயே தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

வலி வடக்கு பிரதேசசபையின் மெத்தனம்

2019 ஜூலை 15ஆம் திகதி அப்போதைய வலி வடக்கு பிரதேசசபையின் உறுப்பினரான  எஸ்.சஜீவன், அப்போதைய தவிசாளர் சோ.சுகிர்தனுக்கும், சபையின் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தில், தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள் அனுமதியற்ற விதத்தில் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது, இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த அபாய எச்சரிக்கையின் பரிமாணத்தை அப்போதைய தவிசாளர் சோ.சுகிர்தன் புரிந்து கொள்ளவில்லை அல்லது பொறுப்புணர்வின்றி செயற்பட்டார் என கருதத்தக்க சம்பவங்களே அதன்பின்னர் நடந்துள்ளது.

அவரது பொறுப்புணர்வின்மை, சுலபமாக தடுத்திருக்கக்கூடிய விகாரை இன்று விஸ்பரூபம் எடுத்துள்ளது.

தையிட்டி விகாரை தொடர்பில் வலி வடக்கு பிரதேசசபையில் பலமுறை பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் தவிசாளர் சாக்குபோக்கும், தவறான தகவல்களை குறிப்பிட்டும் சபையை சமாளித்துள்ளார் என கூட்ட அறிக்கைகளை அவதானிக்கையில் புலப்படுகிறது.

சபையில் இந்த விவகாரம் குறித்து எஸ்.சஜீவன் ஒருமுறை பிரஸ்தாபித்த போது, அது உங்களது வட்டாரமல்ல, பிறகெதற்தமகு பிரச்சினைப்படுகிறீர்கள் என்ற சாரப்பட பதில் கேள்வியெழுப்பியிருந்தார். விகாரை அமைக்கப்பட்டுள்ள வட்டார உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்தவர்தான்.

மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் இது தொடர்பில் ஒருமுறை கேள்வியெழுப்பிய போது, அது உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ளதால் நடவடிக்கையெடுக்க முடியாது என்றார்.

பின்னரான சந்தர்ப்பங்களில், கட்சியின் சட்டத்தரணிகளுடன் பேசியுள்ளதாகவும், வழக்கு தொடரவுள்ளதாகவும் தவிசாளர் குறிப்பிட்டதாக ஏனைய உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டனர்.

2022 பெப்ரவரி காலப்பகுதியில் எஸ்.சஜீவன் கேள்வியெழுப்பிய போது, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் அந்த விகாரை கட்டப்படுகிறது என பதிலளித்துள்ளார்.

இதையடுத்து, உறுப்பினர் எஸ்.சஜீவன் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் 2022 ஜூலையில், நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் விகாரையின் அனுமதி தொடர்பில் தகவல் கோரினார். அதற்கு வழங்கப்பட்ட பதிலில், குறிப்பிட்ட விகாரைக்கு தாம் அனுமதியளிக்கவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வலி வடக்கு பிரதேசசபையில் 2022 ஜூலை மாதத்தில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கட்டுமானத்தை நிறுத்த சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டதற்கு இணைக்க, ஓகஸ்ட் மாதத்தில் பிரதமர் மஸிந்த ராஜபக்ச, ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.

காணி உரிமையாளர்களும் பின்னடிப்பு

இந்த சமயத்தில், தீர்மானத்தை அனுப்பி வைக்க தவிசாளர் தயங்கியதாகவும், “பயமின்றி அனுப்புங்கள். பயமாக இருந்தால் சபையின் தீர்மானத்தை தெரியப்படுத்துகிறேன் என அனுப்புங்கள்“ என தவிசாளரிடம் குறிப்பிட்டதாகவும் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

அதன்படியே கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தை புத்தசாசன அமைச்சிற்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பி, புத்த சாசன அமைச்சு பதிலும் அனுப்பியிருந்தது. தற்போதைய நீதிச்சட்டமுறைக்கு அமைய நடவடிக்கையெடுக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டள்ளது. எனினும், வலி வடக்கு பிரதேசசபை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னதாக, இந்த விவகாரத்தின் தற்போதைய நிலை பற்றி உறுப்பினர் சஜீவன் ஒருமுறை கேள்வியெழுப்பிய போது, காணி உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாது என்ற பொருள்பட தவிசாளர் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, உறுப்பினர் சஜீவன் தனியாளாக முயற்சியெடுத்து, குறிப்பிட்ட காணிகளின் உரிமையாளர்களை கண்டறிந்துள்ளார். காணி உரிமையாளரான பெண்ணொருவர் சுவிசிலும், மற்றும் இருவர் கொக்குவிலிலும், மற்றொருவர் வவனியாவிலும் வதிவது கண்டறியப்பட்டது. எனினும், அவர்கள் யாரும் சட்ட நடவடிக்கைக்கு செல்ல தயாராக இருக்கவில்லையென சஜீவன் குறிப்பிடுகிறார்.

காணி உரிமையாளர்களை கண்டுபிடிக்க மு டியாதென வலி வடக்கு தவிசாளர் அப்போது கூறியிருந்தாலும், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது போராட்டம் நடக்குமிடத்துக்கு வந்த பெண்மணியொருவர், தான் 3 வருடங்களின் முன்னரே காணி உறுதியை வலி வடக்கு தவிசாளரிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இதுதான் தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் பின்னணி தகவல். வலி வடக்கு பிரதேசசபையில் நடந்த இந்த விவகாரங்கள் தொடர்பில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் பக்கமும் செய்தி வெளியிட்டிருந்தது. ஏனைய ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது.

தற்போது போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர்கள் வலி வடக்கு பிரதேசசபையிலும் இருந்தார்கள்.

இந்த விவகாரத்தில்- வலி வடக்கு தவிசாளர், சபையின் உறுப்பினர்கள் மீது முதலாவது விரல் நீட்டப்பட்டாலும், அடுத்தடுத்து, தமிழ் சமூகத்தின் அனைத்து தரப்பின் மீதும் விரல் நீட்டப்பட வேண்டும். ஆகவே, தமிழ் சமூகத்தின் கூட்டு தவறாக இதை கருதி, அதிக குறற்வாளி யார் என்ற வழக்காடு மன்றங்களை தவிர்த்து, இனியாவது எப்படி ஒருமித்து, விழிப்புடன் செயற்படுவதென்ற பொறிமுறையை கண்டடைய வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
3

இதையும் படியுங்கள்

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

Leave a Comment