மதிமுக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகமான தாயகத்தில் மே தினக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது: தொழிலாளர்களின் நலனையும், தமிழகத்தின் நலனையும் காப்பதற்குத் தான் ஒவ்வொரு போராட்டத்தையும் மதிமுக நடத்தி வருகிறது. எனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வரமாட்டேன் என்றுகூறினார்.
நானும், அவரை அரசியலுக்குஅழைக்கவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, வீட்டில் முடங்கிக் கிடந்தேன். அப்போது மதிமுக தொண்டர்கள் அவரை அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
கட்சியின் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்து கொண்டிருக்கிறது. கட்சி தேர்தலுக்குப் பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஒரே உணர்வோடு மதிமுகவை முன்னெடுத்து செல்வோம் என இந்த மே தினத்தில் சபதம் எடுத்துக்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்
துரைசாமிக்கு உள்நோக்கம்: இதையடுத்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: கட்சிக்குள்ளே குழப்பம் இருப்பதாக, இல்லாத ஒன்றை இருப்பதாக செய்தியாக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சி தோற்று போய்விட்டது. 2 ஆண்டுகளாக கட்சிக்கு வராத அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தற்போது ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவருக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.
கட்சியினர் யாருக்கும் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. கட்சியில் 99.9 சதவீதம் தொண்டர்கள் ஒரே உணர்வுடன் இருக்கின்றனர். திருப்பூர் துரைசாமிக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் எதையும் பேச விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.