நாடாளுமன்றத்துக்குள் பொருத்தமில்லாத வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தால் அவற்றை மீளப்பெறுவதுடன், அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன், இன்று (27) நாடாளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினையின் போதே, வெளிவிவகார அமைச்சர் மன்னிப்பு கோரினார்.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் இரா.சாணக்கியனுக்கும் அலி சப்ரிக்குமிடையில் வார்த்தை மோதல் ஏற்பட்ட போது, இனவாத அரசியல் செய்பவர் என்ற சாரப்பட (Commmunal bastard) சாணக்கியனை, அலி சப்ரி திட்டினார்.
இன்று, சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பிய சாணக்கியன், நாடாளுமன்றத்துக்கு பொருத்தமில்லாத வார்த்தைகளால் தன்னை சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார்.
அத்துடன், 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் தேர்தலில் தான் போட்டியிட்டது இரகசியமல்லவென்றும், தற்போதைய தேர்தலில் தமது கட்சி சார்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர் தானேயென்றும், தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் வந்த அலிசப்ரி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட தனக்குரிய கண்ணியத்தை வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், தாம் இலங்கையர் சார்பில் அனைத்து பிரச்சினைகளிற்கும் குரல் கொடுப்பதாகவும், அலி சப்ரி 20வது திருத்துத்துக்கு ஆதரவளித்ததாகவும், தான் ஜனாஸா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது, எழுந்து கருத்து தெரிவித்த அலி சப்ரி, 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச தரப்பில் தேர்தல் கேட்டார். 3000 வாக்குகள்தான் கிடைத்தன. அடுத்த தேர்தலில் இனவாதம் பேசி தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுகிறார். இது என்ன அரசியல்?
கோட்டாபயவின் அமைச்சரவையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக 5 முறை குரல் கொடுத்ததாகவும், எதிர்முகாமிலிருந்தாலும் வாசுதேவ நாணயக்கார அதற்கு சாட்சியென்றும் குறிப்பிட்டார்.
மக்கள் பிரச்சினையை பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். அதை பகிரங்கமாக பேசி இனமுறுகலை ஏற்படுத்தவில்லை. சாணக்கியனை போல பார்வையாளர்களுக்காக பேசவில்லையென்றார்.
தான் கோட்டாபயவை ஆதரித்தது சரியான முடிவெனவும், அவரே நாட்டில் பயங்கரவாதத்தை அழித்தவர் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், நாடாளுமன்றத்தின் கண்ணியத்துக்கு பொருத்தமில்லாத வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தால் அதை திரும்பப் பெற்று, மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.
இதன்போது, எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவும், அலி சப்ரி தெரிவித்த வார்த்தையை கண்டித்தார். அந்த வார்த்தை ஹன்சாரட்டில் பதிவாகியுள்ளதை சுட்டிக்காட்டினார்.
அந்த வார்தையை ஹன்சாரட்டிலிருந்து அகற்றுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
பின்னர் உரையாற்றிய சாணக்கியன், அலி சப்ரியின் முடிவை வரவேற்றதுடன், மஹிந்த அணியுடன் தேர்தலில் போட்டியிட்டதை விளக்க முற்பட்டார். அந்த தேர்தலில் மஹிந்த தரப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த ஆசனத்தையும் வெல்லவில்லையென்றும், மஹிந்த அணியின் அரசியல் எமது மக்களுக்கு பொருத்தமில்லையென்பதால் அதிலிருந்து வெளியேறியதாகவும் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என சபாநாயகர் அறிவித்து, சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார்.