ஜனசக்தி பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பிலான DNA அறிக்கையின்படி மேலும் இரண்டு வெளிநாட்டு உயிரியல் மாதிரிகள் இருப்பதாக நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், ஷாஃப்டரின் வர்த்தக நண்பரான கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் DNA அறிக்கையையும் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
ஷாஃப்டரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதை தீர்மானிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜரான குழுவைச் சேர்ந்த இரண்டு மருத்துவ நிபுணர்கள், ஷாஃப்டரின் கையடக்கத் தொலைபேசி பதிவுகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
ஷாஃப்டர் பயன்படுத்திய தண்ணீர் போத்தல், கேபிள் வயர், கைகளில் கட்டியிருந்த கம்பி ஆகியவற்றில் இரண்டு வெளிநாட்டு உயிரியல் மாதிரிகள் இருந்ததாக அரசாங்கப் பகுப்பாய்வாளர் நீதிமன்றத்தில் அறிக்கை செய்திருந்தார்.