புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிராகவும், தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடங்கள், மத தலங்கள், தொல்லியல் தலங்களை ஆக்கிரமிப்பதற்கு எதிராகவும் நாளை (25) முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக வவுனியா வர்த்தகர் சங்கமும் அறிவித்துள்ளது.
நாளைய போராட்டத்துக்கு ஆதரவளித்து, முழுமையான கதவடைப்பை மேற்கொள்வதாக வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து பிரதான நகரங்களிலுமுள்ள வர்த்தகர் சங்கங்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள், சந்தை வியாபாரிகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், சிகையலங்காரிப்பாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இன்று காலை வவுனியா வர்த்தகர் சங்கத்தின் விசேட கலந்துரையாடலை தொடர்ந்து, நாளை வவுனியாவில் அனைத்து கடைகளையும் மூடி, கதவடைப்பிற்கு முழுமையாக ஆதரவளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாயை கதவடைப்புக்கு ஆதரவளிக்க வவுனியா மாவட்டத்தின் சிகையலங்காரிப்பாளர் சங்கம், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஏற்கெனவே தீர்மானித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளைய கதவடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கோரி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று வவுனியா நகரில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர்.