வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் காரணமாக ஏற்படும் சிறிய அல்லது பெரிய இழப்புக்கள், வசதியீனங்கள் ஆகியவற்றை தயவுசெய்து பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிறிகாந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ’ரில்கோ’ விடுதியில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் மக்கள், சாதாரண தொழிலாளர்கள், வறுமைகோட்டுக்கீழே வாழும் எங்கள் உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் ஏற்படும் இடையூறுக்கு வருத்தம் தெரிவிக்கின்றோம்.
நிரந்தரத் துன்பம் ஒன்றைத் தவிர்க்கவேண்டுமானால் தற்காலிகமான துன்பங்களை சுமந்துதான் தீரவேண்டும் என்கின்ற விலக்கப்பட முடியாத விதியை உணர்ந்தவர்களாக நாம் செயற்பட வேண்டும்.
ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும். எமது மக்கள் மத்தியிலுள்ள பலவிதமான பிரிவினரும் முழு மனதோடு ஆதரவை தருவார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.