மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தைச் சேர்ந்த மூதாட்டி ஜோதி ரகுவன்ஷி. 10 மாதங்களுக்கு முன்பு அவர் தனது வீட்டை விட்டு வெளியேறினார். வேண்டுதலுக்காக அவர் நர்மதா ஆற்றை சுற்றி வலம் வந்தார்.
ஆற்றங்கரையோரமாக அவர் நடந்து சென்றபோது, சில இடங்களில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்துள்ளது. அதனால் அவர் ஆற்றில் இறங்கி தண்ணீரில்நடந்து சென்றார். சில இடங்களில் நீந்தி சென்றுள்ளார். ஆற்றங்கரையில் சந்திக்கும் மக்களில், தேவைப்படுவோருக்கு நாட்டு மருந்துகள் சிலவற்றையும் வழங்கியுள்ளார்.
இதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார். ஜபல்பூர் தில்வாரா படித்துறையில் நர்மதா ஆற்றின் மேல் ஒரு பெண் நடந்து செல்கிறார்’’ என்ற தலைப்பில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டார். இது வைரலாக பரவியதால், அந்த அதிசய பெண்ணை பார்க்க மக்கள் நர்மதா ஆற்றங்கரைக்கு படை எடுத்தனர்.
நர்மதா ஆற்றில் இருந்து வெளியே வந்த அவரை ‘நர்மதா தாய்’ என கூறி மக்கள் வழிபட்டனர். சிலர் அவரைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். மேளதாளங்கள் முழங்கி, அந்த மூதாட்டியை அவர்கள் வழிபட்டு ஆசி பெற்றனர். ஆற்றங்கரையில் மக்கள் கூட்டம் கூடியதும், இது குறித்து விசாரிக்க போலீஸாரும் அங்கு சென்றனர்.
ஆனால் அந்த மூதாட்டி கூறுகையில், ‘‘நான் தண்ணீர் மேல் நடக்கவில்லை. நான் பெண் தெய்வமும் அல்ல. என் பெயர் ஜோதி ரகுவன்ஷி. நர்மதாபுரத்தைச் சேர்ந்தவர். 10 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி நர்மதா ஆற்றை, வேண்டுதலுக்காக சுற்றி வருகிறேன்’’ என்றார்.
இதையடுத்து நர்மதாபுரத்தில் உள்ள ஜோதி ரகுவன்ஷியின் உறவினர்களை போலீஸார் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவரை நர்மதாபுரத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.