சாப்பிடும் போது புரையேறுவது பலருக்கு நேரும் அனுபவம்தான். சிறு வயதில் புரையேறும் சமயங்களில், பெரியவர்கள் நமது தலையில் தட்டுவது, தண்ணீர் கொடுப்பதெல்லாம் வழக்கமான விடயங்கள்.
ஆனால், புரையேறும் போது இதையெல்லாம் செய்யத் தேவையில்லையென்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, இப்படி செய்வதே தவறான விடயங்கள்.
புரையேறும் சமயங்களில் என்ன செய்ய வேண்டுமென விளக்கியுள்ளார் காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜன்.
“நமது தொண்டைப்பகுதியில் மூச்சு விடுவதற்கும், சாப்பிடும் உணவு உள்ளே செல்வதற்கும் என இரண்டு செயல்களுக்கும் சேர்த்து பொதுவான ஒரு பாதை இருக்கும். சாப்பிடும்போது உணவானது வாய்வழியே போய் பின்பக்கமுள்ள உணவுக்குழாய்க்குள் போகும். மூச்சுக்காற்றானது மூக்கின் வழியே போய் முன்புறமுள்ள நுரையீரலுக்குள் போகும். அந்த இடத்தில் உணவும் மூச்சுக்காற்றும் குறுக்கிடும்.
மிருகங்களுடைய உடலமைப்பு இப்படி இருப்பதில்லை என்பதால் அவற்றுக்கெல்லாம் இந்தப் பிரச்னை வருவதில்லை. மனிதர்களுக்கு குரல்நாண் இருக்கும். பேசும்போது குரலை ஏற்படுத்துபவை இவைதான். நாம் சாப்பிடும்போது, மூச்சுக்குழாய் மூடப்படும். அதனால் நாம் சாப்பிடும் உணவோ, குடிக்கிற தண்ணீரோ, மூச்சுக்குழாய்க்குள் போகாமல், உணவுக்குழாய்க்குள் போகும். இதில் பிரச்னை ஏற்படுவதையே புரையேறுதல் என்கிறோம். அதாவது ஒரு பருக்கை சோறோ, ஒரு துளி தண்ணீரோ மூச்சுக்குழாய் வழியே நுரையீரலுக்குள் போகக்கூடும். அப்படிப் போவதால் உயிர் போகாது. ஆனால் அந்தப் பகுதியில் இன்ஃபெக்ஷன் வர வாய்ப்புண்டு. சாதாரணமானவர்களுக்கு இப்படித்தான் நடக்கும்.
அதுவே பக்கவாதம் வந்தவர்களுக்கு ஒரு பக்கம் செயலிழந்திருக்கும். அதனால் அவர்களுக்கு ஒரு பக்கம் குரல்நாண் வேலை செய்யாது. அதனால் அவர்கள் சாப்பிடும்போது எப்போதுமே உணவுத்துகளோ, தண்ணீரோ நுரையீரலுக்குள் போய், அங்கே இன்ஃபெக்ஷனை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
மற்றபடி ஒருமுறை புரையேறி, அதனால் உயிர் போவது என்பது மிகவும் அபூர்வம். பெரிய உணவுத்துகளோ, வேறெதுவுமோ போய் உணவுக்குழாயை அடைத்தால்தான் அப்படி நடக்கக்கூடும். உணவுத்துகளோ, தண்ணீரோ மூச்சுக்குழாயின்மேல் படும்போது உடனே அதை மூடுவதற்கான பாதுகாப்புத் தன்மை அதற்கு இயல்பிலேயே இருப்பதால் தானாக மூடிவிடும். அப்படி மூடிக்கொள்ளும்போது சில நொடிகளுக்கு மூச்சு விட முடியாமல் போகலாம்.
இந்நிலையில் ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு இது ஆபத்தாக மாறி, உயிர் போகலாம்.
புரையேறும்போது ஒன்றுமே செய்யவேண்டாம். ரிலாக்ஸ்டாக மூச்சுவிட்டபடி இருந்தால் போதும். தலையில் தட்டுவது, குடிக்கவோ, சாப்பிடவோ எதையாவது கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதுதான் சரியானது. ரிலாக்ஸ் ஆனதும் நிலை தானாகச் சீராகிவிடும். அதன்பிறகு ஐந்து, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம், சாப்பிடலாம்.“