Pagetamil
இலங்கை

சர்வதேசத்தில் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற முயற்சி: எம்.ஏ.சுமந்திரன்!

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி புதிய சட்டத்தை கொண்டுவர முயற்சித்தால் ஜிஎஸ்பி வரிச்சலுகை இல்லாமல் போகுமென்ற அச்சம் அரசிற்கு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

வடமராட்சியில் நேற்று (7) மாலை நடத்திய ஊடக சந்திப்பின் போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

பாரிய பொருளாதாரச் சிக்கல் ஒன்று இந்த நாட்டை பீடித்திருக்கின்றது. அதிலிருந்து இந்த நாட்டை மீட்க போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார். அவ்வாறு நாடு மீண்டதாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

ஆனால் மிக விரைவிலே நாடு மிக மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு செல்ல இருக்கிறது. அப்படியான வேளையிலே திரும்பவும் மக்கள் போராட்டங்கள் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் அதை கட்டுப்படுத்துவற்கு இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர்.

ஏனெனில் கடந்த காலங்கள் போன்று மீண்டும் மக்கள் போராட்டங்கள் ஏற்படுகிற பொழுது அதனைக் கட்டுப்படுத்த அல்லது ஒடுக்குவதற்கு தற்போது ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற சட்டங்கள் போதாது என்று அவர் கருதுகின்றார்.

அதேபோன்று பயங்கரவாத தடை சட்டங்களை பிரயோகித்தால் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறதாக அமையும் என்பதாலே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொடுக்கப்படுகின்ற ஜீஎஸ்பி வரிச் சலுகை கூட இல்லாமல் போகின்ற நிலைமை ஏற்படும்.

ஆகவே புதியதொரு நல்ல விடயத்தை தாங்கள் செய்வது போல மிக மிக மோசமான ஒரு செயலையே செய்வதற்கு முனைகின்றனர். குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக காட்டிக் கொண்டு அதனை விட மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமென்ற இந்தச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறேன் என்று ஒரு மாயத் தோற்றத்தை காட்டிக் கொண்டும் சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய சட்டத்தையே கொண்டு வருகிறேன் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கான உண்மையான நோக்கம் என்னவெனில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக அல்லது அரசுக்கு எதிராகவோ தமது எதிர்ப்பை காண்பிக்கின்ற போது அதனை இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கான ஒரு கருவியாகத்தான் அல்லது முன்னெச்சரிக்கையாகத் தான் முன்கூட்டியே இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முணைந்திருக்கின்றது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது அரசியலமைப்பை மீறுகின்றது. அவ்வாறு அரசியலமைப்பு மீறுகின்றது என்று சொல்லியோ அல்லது வேறு காரணங்களைக் கூறியோ நீதிமன்றம் சென்றாலும் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் நீதிமன்றம் சொல்லலாம். அதே நேரம் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்றும் கூட நீதிமன்றம் சொல்லலாம்.

ஆனால் இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் அரசாங்கம் செய்யலாம். ஏனெனில் ஆளுங்கட்சியில் மாத்திரமல்ல எதிர்க்கட்சியில் இருக்கின்ற சில தரப்புக்களும் இணையப் போவதாக அறிகின்றோம்.

ஆனாலும் இந்த அரசுக்கு இப்பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகளில் இருக்கின்ற பலர் இப்போது கட்சிதாவுவதற்து இருக்கின்றனர். ஆகையினாலே அரசாங்கம் மூன்று இரண்டு பெரும்பான்மையை இலகுவாகவே பெற்றுக் கொள்ளலாம்.

ஆகையினால் அதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இதனை தடுக்க முடியாது. ஆகவே அரசின் இந்தப் புதிய சட்டம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களை மீறுகிறது என்பதை நாம் தெளிவாக சொல்லுகின்றோம். நாம் மட்டுமல்ல இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பலரும் இந்த விடயங்களை கூறுகின்றனர்.

இதனால் ஜீஎஸ்பி வரிச் சலுகை கிடைக்காமல் போகலாம் என்பதும் தெரிந்த விடயம். அது ஒன்றுதான் இந்த சட்ட மூலம் இயற்றுகின்ற அரசின் யோசனையை மாற்றலாம் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நிறுவனங்களும் கூட இதனுடைய தார்ப்பரியத்தை அல்லது மோசமான தன்மையை உணர்ந்து அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் எப்படியாக நாடு பூராகவும் எழுச்சி ஏற்படுத்தினோமோ அதே போல் இந்த மோசமான சட்டத்தை தடுப்பதற்கு மக்களிடையே சென்று மக்கள் மத்தியில் விளக்கங்களை கொடுத்து ஒரு எழுச்சியை ஏற்படுத்த முனைகிறேன்.

இவ்வாறு நாட்டு மக்களிடத்தே இந்த விடயம் தொடரபில் கலந்துயாடல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மக்கள் எழுச்சியை எடுத்திக் காட்டுவோமாக இருந்தால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தடுக்கலாம் என்று கருதுகின்றேன் என்றார்.

இதையும் படியுங்கள்

சிஐடியில் மைத்திரி

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு!

Pagetamil

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!