இத்தாலியில் இருந்து விடுமுறையில் வந்திருந்த கொஸ்வாடிய பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர், மீண்டும் இத்தாலிக்கு செல்லவிருந்த நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச்சூட்டிலிருந்து அதிர்ஸ்டவசமாக உயிர்தப்பினார்.
அவருக்கு நெருக்கமாக துப்பாக்கியால் இரண்டு முறை சுட்ட போதும், துப்பாக்கி இயங்காததால் அவர் அதிர்ஸ்டவசமாக உயிர்தப்பினார்.
இவர் 19 வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (2) இரவு 7 மணியளவில் வீட்டின் முன் வந்த இனந்தெரியாத இருவர், இத்தாலிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த நபரின் பெயரைக் கூறி, சுகமாக பொழுதைக் கழிக்கிறீர்களா எனக் கேட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நண்பர்கள் இருவர் வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு, “நீங்க யாரென்று எனக்கு உடனே அடையாளம் தெரியவில்லை” என்று கேட்டுக்கொண்டே மோட்டார் சைக்கிள் அருகே வந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் கைத்துப்பாக்கி எடுத்து, அவரது மார்புக்கு அருகே நீட்டி விசைவில்லை இழுத்துள்ளார். எனினும், துப்பாக்கி இயங்கவில்லை.
உடனடியாக சுதாகரித்தவர் வீட்டின் பின்பக்கமாக ஓடினார்.
துப்பாக்கிதாரி மீண்டும் துப்பாகியை சரி செய்து, ஓடிக் கொண்டிருந்தவரை குறிவைத்து மீண்டும் விசைவில்லை இழுத்தார். எனினும், இரண்டாவது முறையும் துப்பாக்கி இயங்கவில்லை.
துப்பாக்கியை சரி செய்து மூன்றாவது முறை சுட்ட போது, இலக்கு தவறி அயல்வீட்டை தோட்டா தாக்கியது. தோட்டா அயல் வீட்டில் இருந்த பெண்ணின் தலைக்கு அருகில் சென்று சுவரில் மோதியதாக போலீசார் கூறுகின்றனர்.
இத்தாலிக்கு செல்லவிருந்துவர் தப்பியோடி, அருகில் உள்ள தென்னந்தோப்பில் சிறிது நேரம் மறைந்திருந்து விட்டு, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவரது மனைவி மற்றும் பிள்ளைககளும் வீட்டிற்குள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர் இன்று (3) அதிகாலை இத்தாலிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இத்தாலிக்கு செல்வதற்கு முன்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலமும் வழங்கியுள்ளார்.
தனக்கு தெரிந்த வரையில் தனக்கு எந்த விரோதமும் இல்லை என்றும், எந்த நோக்கத்திற்காக இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
சுமார் 19 வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வரும் அவர், அவ்வப்போது விடுமுறையில் இலங்கை வந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து வருகிறார்.