யாழ்ப்பாணம், கோப்பாயில் வீடு புகுந்து வாளால் வெட்டி நகை திருட முற்பட்ட திருட்டு கும்பலை வீட்டு உரிமையாளர் விரட்டி விரட்டி அடித்துள்ளார். வாளையும் போட்டு விட்டு திருடர்கள் தலைதெறிக்க தப்பியோடி விட்டனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
கோப்பாய்-மானிப்பாய் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த திருடர்களே தப்பியோடியுள்ளனர்.
வலிகாமம் கிழக்கு பிரதேசசபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினரான இராசேந்திரம் செல்வராசா (50) என்பவரின் வீட்டிலேயே திருட்டு முயற்சி நடந்தது. செல்வராசா எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலிலும் குத்து விளக்கு சின்னத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளார்.
பிரதேசசபை உறுப்பினர் தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அவர் கழுத்தில் நகை அணிந்திருந்த அவதானித்த 3 திருடர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்துள்ளனர்.
பிரதேசசபை உறுப்பினரும் மனைவியும் வீட்டுக்குள் நுழைந்த பின்னர், இரண்டு திருடர்கள் கொட்டன், வாளுடன் நுழைந்து, பிரதேசசபை உறுப்பினரின் கழுத்தில் அணிந்திருந்த தாலி, தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோட முயன்றனர்.
எனினும், சுதாகரித்துக் கொண்ட மனைவி, தங்க நகைகளை பாதுகாத்தபடி, அவர்களுடன் போராடினார். கணவரும் சம்பவ இடத்திற்கு வந்தார்.
தங்க நகைகளை விடாமல் பிடித்திருந்த பெண்ணின் முழுங்கையில் கொட்டனால் அடித்துள்ளனர். இதனால் அந்த பெண்ணின் கை பாதிக்கப்பட்டது.
அத்துன், பெண்ணை நோக்கி வாளால் வீசியுள்ளனர். துரிதமாக செயற்பட்ட பிரதேசசபை உறுப்பினர், மனைவியில் வாள் தாக்காமல், வாளை தனது கைகளால் இறுகப்பிடித்துக் கொண்டார். இதனால் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
எனினும், வாளை விடாமல் இரும்புப்பிடி பிடித்தார். அத்துடன் திருடர்களை உதைக்க தொடங்கினார். ஒரு திருடன் தலைதெறிக்க தப்பியோடினார். வாளுடன் வந்தவனை இறுகப்பிடித்து மிதிமிதியென மிதித்தார்.
அத்துடன், உதவிக்கு வருமாறு அயலவர்களை அழைத்தார். அயலவர்கள் யாரும் உடனடியாக அருகில் செல்லவில்லை. இந்த இடைவெளிக்குள் அந்த திருடனும் தப்பியோடினார். அந்த திருடனின் வாளை எடுத்துக் கொண்டு விரட்டிக்கொண்டு சென்று, அந்த திருடனை வெட்டியுள்ளார். திருடன் காயங்களுடன் தப்பியோடி விட்டான்.
இதன் பின்னர் பிரதேசசபை உறுப்பினரும், மனைவியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தம்பதியை, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.