வடகிழக்கு மெக்சிகோவில் எல்லையில் கடத்தப்பட்ட நான்கு அமெரிக்க குடிமக்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட நான்கு பேரில், “அவர்களில் இருவர் இறந்துவிட்டனர், ஒருவர் காயமடைந்துள்ளார், மற்றவர் உயிருடன் இருக்கிறார்” என்று தமௌலிபாஸ் மாநில கவர்னர் அமெரிகோ வில்லார்ரியல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கொல்லப்பட்ட இருவரும் காயமடைந்த நபரும் ஆண்கள் என அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். குழுவில் பயணித்த ஒரு பெண் காயமின்றி இருந்ததாக கூறப்படுகிறது.
கடத்தல்களை வெள்ளை மாளிகை கண்டித்ததுடன், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறியது.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “இந்த வழக்கில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் மெக்சிகோ அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றப் போகிறோம்“ என்றார்.
“டிஇஏ [அமெரிக்க மருந்து அமலாக்க நிர்வாகம்] மற்றும் எஃப்பிஐ [பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ்] போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் முழு நெட்வொர்க்குகளையும் சிதைக்கவும், சீர்குலைக்கவும், இறுதியில் வழக்குத் தொடரவும் முடிந்த அனைத்தையும் செய்கின்றன.” என்றார்.
தமௌலிபாஸின் அட்டர்னி ஜெனரல் இர்விங் பாரியோஸ் ட்விட்டரில், உயிர் பிழைத்த இரண்டு அமெரிக்கர்களும் டெக்சாஸ் எல்லையில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினார்.
மெக்சிகோவில் நீண்ட காலமாக வன்முறை மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்த இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் காவலில் இருப்பதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்தார்.
வடக்கு கரோலினாவில் வசிப்பவர்கள் என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்ட நான்கு அமெரிக்க குடிமக்கள், வெள்ளியன்று டெக்சாஸிலிருந்து மெக்ஸிகோவின் மாடமோரோஸ் நகருக்குச் சென்றுள்ளனர், அப்போது அவர்களது வெள்ளை மினி வாகனத்தை போதைப்பொருள் கடத்தல் குழு வழிமறித்து கடத்திச் சென்றது.
நான்கு பணயக்கைதிகள் ஆயுதமேந்திய நபர்களால் பிக்-அப் டிரக்கின் பின்புறத்தில் ஏற்றப்பட்டதைக் காட்டும் வீடியோ பின்னர் வெளிவந்தது. வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு மெக்சிகோ பெண்ணும் கொல்லப்பட்டதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருள் வாங்க சென்ற போதே 4 பேரும் சிக்கியிருக்கலாமென நம்பப்படுகிறது.
மாடமோரோஸ் நகரத்தில் பலம் வாய்ந்த போதைப்பொருள் கும்பல்கள் ஆதிக்கம் செலுத்துகிறன, அவர்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிடுகிறார்கள்.
வன்முறைகளுக்கு மத்தியில், தமௌலிபாஸ் மாநிலத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மெக்சிகோ மக்கள் காணாமல் போயுள்ளனர், சமீபத்திய தசாப்தங்களில் நாட்டில் 100,000 க்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளனர். 2007 க்குப் பிறகு, மெக்சிகோவின் அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது இராணுவ ஒடுக்குமுறையைத் தொடங்கிய பின்னர் அனேகர் காணாமல் போயிருந்தனர்.