இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், யாழ் மாநகர முதல்வர் தெரிவில் தமிழ் மக்கள் கூட்டணியினர் (வி.மணிவண்ணன் அணியினர்) வேட்பாளரை நிறுத்த மாட்டார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதற்கான பேச்சுக்களை முன்னெடுத்ததாகவும், அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த பிரமுகர் தெரிவித்தார்.
யாழ் மாநகரசபையின் புதிய முதல்வர் தெரிவு, எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. திட்டமிட்டபடி, யாழ்ப்பாணம் மாநகரசபை 19ஆம் திகதி கலையுமெனில், புதிய முதல்வர் 9 நாட்கள்தான் பதவியிலிருப்பார்.
என்றாலும், இலங்கை தமிழ் அரசு கட்சி முதல்வர் விவகாரத்தை கௌரவப் பிரச்சினையாக கருதுகிறது. யாழ்ப்பாணம் மாநகரசபையை கைப்பற்ற முடியாத நிலையில், பிரதான தமிழ் கட்சியென எவ்வாறு உரிமை கோர முடியுமென்ற நெருக்கடியை அந்தக் கட்சி உணர்கிறது.
இதையடுத்து, யாழ்ப்பாண மாநகர புதிய முதல்வர் வேட்பாளராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ.சிறில் தெரிவாகியுள்ளார்.
இன்று (5) யாழ், மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் மாநகரசபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் சிறில் முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அவரது பெயரை, முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் பிரேரித்தார்.
சிறிலை புதிய முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதென தீர்மானித்து, அதற்கான பேச்சுக்களை மேற்கொண்டவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். யாழ்.மாநகரசபையை எம்.ஏ.சுமந்திரன் கையாண்ட நிலையில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு, தமிழ் அரசு கட்சியின் வசமிருந்து மாநகரசபை மீண்டும் மீண்டும் கைநழுவியது.
இந்த நிலையில், கட்சியின் தலைமை பதவியை குறிவைத்துள்ள சிறிதரன், கட்சிக்குள் தனது நிலைமை பலப்படுத்தவும், எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிரான அணியை கட்டியெழுப்பவும் யாழ் மாநகரசபை விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.
கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவின் ஆசீர்வாதத்துடன்தான் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.
சொலமன் சிறிலை மாநகர முதல்வர் வேட்பாளராக்கலாமென தீர்மானித்து, இது குறித்து ஆனோல்ட்டிடமும் சிறிதரன் பேச்சு நடத்தினார்.
தமிழ் அரசு கட்சி மாநகரசபையை கைப்பற்ற வேண்டுமெனில், வி.மணிவண்ணன் தரப்பினர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என கணக்கிட்ட சிறிதரன், அந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
“10ஆம் திகதி மாநகர முதல்வர் தெரிவில் வேட்பாளரை நிறுத்த வேண்டாமென மணிவண்ணன் தரப்பினரை எமது கட்சி கேட்டது. சில முறை பேச்சு நடத்தினோம். இறுதியில் அவர்கள் எமது கோரிக்கையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டனர். சிறிதரனுடன் அவர்களிற்கு இருக்கும் தனிப்பட்ட நெருக்கத்தினால் மட்டுமே அவர்கள் இந்த கோரிக்கைக்கு சம்மதித்தனர்“ என தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
சிறிதரன் எம்.பி, வி.மணிவண்ணன் தரப்பினருடன் பேச்சு நடத்தியதை சுயாதீனமாக தமிழ்பக்கமும் உறுதி செய்தது. எனினும், என்ன பேசினார்கள் என்ற விபரம் வெளியாகவில்லை.
மணிவண்ணன் தரப்பினர் போட்டியிடாவிட்டாலே, தாம் யாழ் மாநகரசபையை கைப்பற்றலாமென தமிழ் அரசு கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.