சனிக்கிழமையன்று ஈரானின் பல மாகாணங்களில் பாடசாலைகளில் மாணவிகளிற்கு விசம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமநை்த பொதுமக்கள் தலைநகரில் பல வைத்தியசாலைகளின் முன்பாக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
நவம்பரில் இருந்து, ஈரான் முழுவதிலும் உள்ள பல பெண்கள் பாடசாலைகளில் நச்சுத்தன்மையால் மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான சிறுமிகள் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர்.
ஈரான் அதிகாரிகள் ஆரம்பத்தில் இந்த நிகழ்வுகளை நிராகரித்தனர், ஆனால் சமீபத்தில் பிரச்சினையின் அளவை ஒப்புக்கொண்டனர்.
தலைவலி, இதயத் துடிப்பு, சோம்பல் மற்றும் நகர இயலாமை ஆகியவை மாணவர்களால் தெரிவிக்கப்படும் அறிகுறிகளாகும். டேன்ஜரைன்கள், குளோரின் போன்ற அசாதாரண வாசனைகளை நுகர்ந்ததாக சிலர் விவரித்துள்ளனர்.
ஃபார்ஸ், ஹமேடான், மேற்கு அஜர்பைஜான் மற்றும் அல்போர்ஸ் உட்பட பல மாகாணங்களில் சனிக்கிழமையன்று விசம் கலந்ததாக அரசுடன் இணைந்த செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
March 4, 2023.
Poisoning of schoolchildren in Asadabadi girls’ school in Tehran.pic.twitter.com/OIhxwLZ73V
— 1500tasvir_en (@1500tasvir_en) March 4, 2023
ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள கவார் நகரில் உள்ள பெண்கள் பாடசாலையில் இருந்து 27 மாணவிகள் குமட்டல், பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளை அனுபவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள ஒருமியே என்ற இடத்தில் உள்ள பெண்கள் பாடசாலையில் இருந்து மேலும் 30 மாணவிகள் விசம் அருந்திய பின்னர் மருத்துவ மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், விசம் கலந்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும் நிறுவனம் கூறியது.
ஈரான் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட பெண்கள் பாடசாலைகளில் விசம் கலக்கப்பட்டதாக தன்னார்வலர் குழுவொன்று பட்டியலை வெளியிட்டது. சனிக்கிழமையன்று 20 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள இந்த பாடசாலைகளில் விசம் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.
சில இடங்களில் போராட்க்காரர்கள் அரசின் மீது குற்றம்சாட்டினர். விசம் கலக்கும் விவகாரத்தின் பின்னால் அமெரிக்கா உள்ளதாக ஈரானிய ஆட்சியாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதை நிராகரித்துள்ளனர். அமெரிக்கா இதற்கு காரணமல்ல என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிடும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் பாடசாலை மாணவிகள் மீது நடந்து வரும் விசத் தாக்குதல்களை, “சதி” என்று ஜனாதிபதி இப்ராஹிம் ரைய்சி விவரித்தார். இது ஈரானின் “எதிரிகள்” செயற்படுத்தும் திட்டம் என குற்றம் சாட்டினார். அவர் எந்த குறிப்பிட்ட நாடுகளையும் குறிப்பிடவில்லை, ஆனால் ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைக் குறிக்க “எதிரி” என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்கா மற்றும் ஜேர்மன் அரசாங்கங்களும், விச தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த ஈரானுக்கு அழைப்பு விடுத்தன.
5 மாதங்களின் முன்னர் மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் பரவிய போராட்டங்களுக்குப் பிறகு விசத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் ஈரான் அரசு உள்ளதாகவும், போராட்டங்களில் பங்கேற்றதற்காக மாணவிகளுக்கு எதிரான “பழிவாங்கும்” ஒரு வடிவம் என்றும், பெண் கல்விக்கு எதிரான நடவடிக்கையென்றும் ஈரான் அரச எதிர்ப்பாளர்கள் இரண்டு விதமான காரணங்களை சொல்கிறார்கள்.
March 4, 2023, Tehran.
The brutal attack of the forces of the Islamic Republic forces on the families worried for their poisoned school children and the arresting of dozens of them.pic.twitter.com/XnJH3BmkPz— 1500tasvir_en (@1500tasvir_en) March 4, 2023
ஆனால், ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா, இஸ்ரேலின் பின்னணியில் நடக்கும் நாசகார நடவடிக்கையென அரச தரப்பு கூறுகிறது.
ஈரானின் அணுசக்தி முயற்சிகள் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது திடீர் தாக்குதலுக்கு இஸ்ரேல் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அரசாங்கத்தை பலவீனப்படுத்த மேற்கு பின்னணியில் விசம் கலக்கும் நாசகார நடவடிக்கை நிகழவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.