நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. ஹரி புரூக், ஜோ ரூட் சதம் விளாசினர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டன் நகரில் தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.
துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. ஸாக் கிராவ்லி 2, ஆலி போப் 10 ரன்களில் மேட் ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தனர். பென் டக்கெட் 9 ரன்னில் டிம் சவுதி பந்தில் நடையை கட்டினார்.
6.4 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ஹரி புரூக், ஜோ ரூட்டுடன் இணைந்து எந்வித நெருக்கடியையும் உணராமல் அதிரடியாக விளையாடினார்.
107 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார் ஹாரி புரூக். 6வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஹாரி புரூக்கிற்கு இது 4வது சதமாக அமைந்தது. மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 182 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 29வது சதத்தை அடித்தார். இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
ஹரி புரூக் 169 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளுடன் 184 ரன்களும், ஜோ ரூட் 101 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தஜோடி 4வது விக்கெட்டுக்கு இதுவரை 294 ரன்கள் குவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹரி புரூக் 153 ரன்கள் விளாசியிருந்தார். இதுவே டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ரன்களாக இருந்தது. இதை தற்போது வெலிங்டன் டெஸ்டில் கடந்துள்ளார்.
இதுவரை டெஸ்ட் போட்டியில் 9 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள ஹரி புரூக் 5 சதங்கள், 3 அரை சதங்களுடன் 807 ரன்களை வேட்டையாடி உள்ளார். இதன் மூலம் 9 இன்னிங்ஸ்களில் 800 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார் ஹரி புரூக்.
இந்த வகையில் இதற்கு முன்னர் 9 இன்னிங்ஸ்களில் இந்தியாவின் வினோத் காம்ப்ளி 798 ரன்கள் சேர்த்திருந்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது ஹரி புரூக் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் (780 ரன்கள்), இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (778), மேற்கிந்தியத் தீவுகளின் எவர் டன் வீக்ஸ் (777) ஆகியோரது சாதனைகளையும் அசாத்தியமாக தகர்த்தெறிந்துள்ளார் 24 வயதான ஹரி புரூக்.