மன்னாரில் 250 மெகா வாட் காற்றாலை திட்டத்தையும், பூநகரியில் 100 மெகா வாட் காற்றாலை திட்டத்தையும் அமைக்க முதலீட்டு சபை, இந்தியாவின் அதானி குழுமத்துடன் இன்று மாலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மொத்த முதலீடு 442 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.
இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் அதானி குழுமம், வரிஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக அண்மையில் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இதனால், அதானியின் பங்குகள் சடுதியாக சரிந்து, உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து பின்தள்ளப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலும், அதானி நிறுவனம் திட்டமிட்டபடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மன்னார் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை திட்டங்களில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு அரசாங்கம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர சற்று முன்னர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேவையான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் அனுமதிகள் பெறப்படாததால், இத்திட்டம் சட்டவிரோதமானது என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடங்கிய கடந்த ஆண்டு டிசம்பரில் நிதி உதவி பெறுவதற்காக அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா சென்றபோது, இந்த திட்டங்கள் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்தது.