போக்குவரத்து விதிமீறலில் சிக்கிய முச்சக்கரவண்டி சாரதிக்கு தண்டச் சீட்டு எழுதாமல் விடுவதற்காக, இலஞ்சம் பெற முற்பட்ட இரண்டு போக்குவரத்து பொலிசார், முச்சக்கர வண்டிக்குள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிபுரியும் சட்டத்தரணி பயணிப்பதை அவதானித்து, இலஞ்சத்தை பெற மறுத்து, திண்டாடிய சம்பவம் மருதானையில் இடம்பெற்றுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், வாடகை முச்சக்கரவண்டியில் திணைக்களத்திற்கு கடமைக்குச் சென்று கொண்டிருந்தார்.
முச்சக்கர வண்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதால் அதனை வழிமறித்த இரண்டு போக்குவரத்து பொலிசார், அதற்கு தண்டச் சீட்டு எழுத முற்பட்டனர்.
எனினும், தண்டச்சீட்டு எழுத வேண்டாமென சாரதி கெஞ்சியுள்ளார்.
இதையடுத்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஒரு மாற்று திட்டத்தை முன்வைத்தனர். தண்டச்சீட்டு எழுதாமல் விடுவதெனில், அருகிலுள்ள உணவகத்திற்கு சென்று, சாப்பிடுவதற்கு பனிஷ் மற்றும் பானங்களை வாங்கி வருமாறு குறிப்பிட்டனர்.
இதையடுத்து, அருகிலுள்ள உணவகத்தை நோக்கி சாரதி ஓடிச் சென்றுள்ளார்.
சாரதியின் தாமதம் காரணமாக முச்சக்கரவண்டியில் இருந்த சட்டத்தரணி கீழே இறங்கியுள்ளார். புடவையில் முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கியவர், முக்கிய பதவியில் இருக்கக்கூடும் என சந்தேகித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அவரிடம் சென்று, அவர் யார் என்று கேட்டார்.
தான் யார் என்று அந்த பெண்மணி, பொலிசாரிடம் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் பதறத் தொடங்கியுள்ளனர்.
நிலைமையை சமாளித்த ஒரு பொலிஸ்காரர், குரலை உயர்த்தி, “சாரதி இந்தப்பக்கமாவா ஓடிப் போனார்? எங்கே அவர் போனார்?“ என மற்றவரை பார்த்துக் கேட்டார்.
இதற்குள் சாரதி உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.
பொலிஸ்காரர்களிடம் அவற்றை சாரதி கொடுக்க, “இதெல்லாம் என்ன? எங்களுக்கு இதையெல்லாம் ஏன் தருகிறீர்கள்? அந்த பெண்மணிக்காக வாங்கி வந்தீர்களா” என்று சங்கடப்பட்டுள்ளனர்.
“ஏன் சேர்… நீங்கள் சொன்னதைத்தான் கொண்டு வந்தேன்” என்ற முச்சக்கர வண்டி சாரதி, அவற்றை பொலிசாரிடம் கொடுத்தார்.
பொலிசார் தர்மசங்கடத்தில் நெளிந்தனர்.
சாரதி அவற்றை முச்சக்கர வண்டியில் வைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.