இலங்கையில் இன்று பாரிய விடயங்கள் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாகவும் அண்மையில் பாரிய இரண்டு அமெரிக்க விமானங்கள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் பாரிய இரண்டு விமானங்களின் வருகை தந்திருந்தது. ஆனால் தொடர்பாக ஊடகங்கள் அமெரிக்க தூதரகத்தை வினவியபோதும் அதற்கு பதில் வழங்கப்படவில்லை.
அமெரிக்காவின் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு தூதுக்குழுவில் ஆகக்கூடுதலாக 25 பேர் உள்ளடங்கியிருந்தாலும் எதற்காக இவ்வாறு இரண்டு விமானங்கள் வருகை தந்தமை தொடர்பாக பாரிய சந்தேகம் நிலவுகிறது.
தற்போதைய அரசாங்கம் ஜனநாயக விரோத அரசாங்கம், இந்த திருட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக வெநாட்டு தரப்பிற்கு சொத்துக்களை விற்கக்கூடிய நிலையிலேயே காணப்படுகிறது.
எனவே வெளிநாடுகள் தமது நலன்களை அடைவதற்காக இலங்கையை சூறையாடக்கூடிய சூழலே காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.