சங்கானை தொடக்கம் பொன்னாலை வரையான வீதி, மாவடி தொடக்கம் மூளாய் வரையான வீதி போன்றவற்றை திருத்தாமல் மக்களின் ஆயுளைக் குறைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு வலி.மேற்கு பிரதேச சுகாதாரக் குழுக் கூட்டத்தில் சபை உறுப்பினர் ந.பொன்ராசா கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மேற்படி கூட்டம் சபையின் மண்டபத்தில் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்றது.
கூட்டத்தில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், வலி.மேற்கு பிரதேச செயகல உத்தியோகத்தர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின்போதே வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கை விடப்பட்டது.
சங்கானை தொடக்கம் பொன்னாலை வரையான வீதி ஊடாகப் பயணிக்கும் மக்களுக்கும் இந்த வீதியின் அருகே குடியிருப்போருக்கும் வர்த்தகர்களுக்கும் எதிர்காலத்தில் சுவாச நோய்கள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
வீதிகளை புனரமைக்கும்போது புழுதி ஏற்பட்டு மக்களுக்கு நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக அடிக்கடி தண்ணீர் தெளிக்கவேண்டும். இந்த சுகாதாரச் செயற்பாட்டை மேற்கொள்ளாத ஒப்பந்தகாரர்களுக்கு வேலைகள் வழங்கப்படுவதில்லை.
ஆனால், கடந்த பல மாதகாலமாக எமது பிரதேச வீதிகள் கிளறி விடப்பட்டு உள்ளன. மாவடி – மூளாய் வீதி மோசமாக சேதடைந்துள்ளது. மக்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி வேலைகள் நிறுத்தப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கடமையாகும்.
இதைச் செயற்படுத்தாமல் மக்களின் உயிர்களுடன் விளையாடும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக நேரடியாகவோ மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாகவோ வழக்குத்தாக்கல் செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என சுகாதார வைத்திய அதிகாரியைக் கேட்டுக்கொண்டேன்.
ஆனால், தாங்கள் அவ்வாறு வழக்குத்தாக்கல் செய்ய முடியாது எனவும் அதை பிரதேச சபையே செய்யவேண்டும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி பதிலளித்தார்.
இதையடுத்து, உரிய சட்ட ஏற்பாடுகளை ஆராய்ந்து உடனடியாக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தவிசாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.