கடந்த திங்கட்கிழமை இரவு தெமட்டகொட, ஹல்கஹகும்புர பிரதேசத்தில் 25 வயதான இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி இரவு பொரளையில் உள்ள வீடொன்றிற்கு இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பிரவேசித்து, போதைப்பொருள் கடத்தல்காரர் என குற்றம்சாட்டி இளைஞர் ஒருவருக்கு கைவிலங்கிட முயன்ற போது, பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருதரப்பிற்கிடையிலான தகராற்றில், இராணுவப் புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கி தவறுதலாக சுடப்பட்டதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 25 வயதுடைய பெண் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னர் இருவரும் பொரளை பொலிஸாரிடம் வந்து துப்பாக்கியை பொலிஸாரிடம் ஒப்படைத்து பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று பொரளை பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தின் போது, புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரும் சிவில் உடையில் இருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் இராணுவத்தினர் பொலிஸாருக்கு அறிவித்தார்களா என்பது தனக்குத் தெரியாது என்றார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் குறித்த இரு இராணுவ சிப்பாய்களினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல்காரர் சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.