தமிழில், ‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘மாறன்’ படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் நடித்துள்ள ‘கிறிஸ்டி’ என்ற மலையாளப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட அவர், பேட்டி அளித்தார்.
அப்போது, “கதாநாயகிகளை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் விருப்பமில்லை. ‘லேடி’ என்பது தேவையில்லை. கதாநாயகர்களை ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைப்பது போல, பாலினம் இல்லாமல் நாயகிகளையும் அப்படியே அழைக்க வேண்டும்” கூறியிருந்தார்.
நயன்தாரா, மஞ்சு வாரியர் ஆகியோர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகின்றனர். நயன்தாராவுக்கு எதிராகத்தான் மாளவிகா அப்படி பேசியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. இதற்கு மாளவிகா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “நான் சொன்ன கருத்து, பெண் நடிகர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லைப் பற்றியதுதான். யாரையும் தனிப்பட்ட முறையில் கூறவில்லை. நயன்தாராவை, மூத்த நடிகை என்ற முறையில் மதிக்கிறேன். அவருடைய நம்பமுடியாத சினிமா பயணத்தை வியந்து பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.