தமிழ் மக்களுடைய அரசியல் உரிமை வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான தேர்தல்தான் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலாகும் உள் நாட்டிற்குள்ளே ரணில் விக்கிரமசிங்க, கோத்தபாய ராஜபக்ச அவர்களும் சிறிலங்கா பொதுஜனபெரமுன கட்சியினை சேர்ந்தவர்களும் தமிழர்களுக்கு சோறும் தண்ணியும் தான் இன்று வேண்டும் என்கிறார்கள். இல்லை தமிழர்களுக்கு அரசியல் உரிமை முக்கியம் என்று கூறுவதற்கான சந்தர்ப்பமான தேர்தல்தலாகத்தான் நாம் இதை பார்க்கவேண்டும்.
என்று தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று மாலை கோறளைப்பற்று பிரதேச சபை தேர்தலில் முறக்கொட்டான்சேனையில் 14 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் குழந்தைவேல் பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவரை ஆதரித்தும் அரசியல் பணிமனையினை வைபவ ரீதியாக திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் நிகழ்வில் பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் உட்பட கட்சியின் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது-
எமது மாவட்டத்திற்குள்ளே எமது மண் வளத்தை களவெடுத்து மக்களை ஏமாற்றி மக்களின் வாழ்வாதரத்தை அழிப்பதற்கு ராஜபக்சக்களுடன் தோள்நின்று உழைத்தவர்களுக்கு தொடர்ச்சியாக உங்களது ஆசை வார்த்தைகளைக் கேட்டு ஏமாறமாட்டோம் என்று மட்டக்களப்பு மக்கள் விடுக்கும் செய்திக்கான இத்தேர்தல் உள்ளது.
சேதனப் பசளை மூலம் விவசாயம் செய்வதன் மூலம் விவசாயிகள் இலட்சாதிபதியாகுவர்கள் என்று மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் கூறியிருந்தார். அவ்வாறான விவசாயி ஒருவரை காட்டினால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதற்கு தயாராகவுள்ளேன். அவர்களால் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டி அபிவிருத்தி சார்ந்த வேலைகளை நாங்களே செய்யவேண்டிய நிலை காணப்படுகிறது. காணி பிரச்சினையாக இருக்கட்டும் அவர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையாக இருக்கட்டும் ஏன் மீனவர்களது மீன் பிடித் தொழிலாக இருக்கட்டும் நாங்களே முன்னின்று செய்பட வேண்டியுள்ளது.
தற்போது தொல்பொருள் என்ற பேரில் மாவட்டத்தில் 600 இடங்களை கைவசப்படுத்தியுள்ளனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாவிட்டால் 30, 40 வருடங்களுக்குள் இப் பிரதேசத்தில் தமிழர்களே இல்லாத நிலை ஏற்படும். எனவேதான் எமது மக்களை பல்வேறு பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை நாங்கள் ஆதரிக்க வேண்டும். பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு தருவதாக தேர்தல் காலங்களில் வந்து ஆசை வார்த்தைகளை கூறி பொய் வாக்குறுதிகளை வழங்கவில்லை. நாட்டில் தற்போது பனடோல் இல்லாத நிலை காணப்படுகிறது.எனவே ஒரு இனத்திற்கான செய்தியை கூறும் தேர்தலாக இந்த தேர்தலை நாம் பார்க்கிறோம் என்றார்.
எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.