ஜீ நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வு செய்தி கிரிக்கெட் மற்றும் விளையாட்டுத் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பி.சி.சி.ஐயின் தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா குறித்த அந்தப் புலனாய்வு செய்தியில் பல பகீர் உண்மைகள் வெளியாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேத்தன் சர்மா கூறியதாக வெளியான தகவல்களில் சில இங்கே…
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையே உரசல் இருப்பதாகப் பல செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் சேத்தன் சர்மா பேசியிருக்கிறார்.
“கோலிக்கும் ரோஹித்துக்கும் இடையே பெரிய போரெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால், இருவருக்கும் இடையே ஈகோ யுத்தம் இருந்தது உண்மைதான். அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா போல இருவரும் நடந்துகொண்டனர்.
மேலும், கங்குலி ரோஹித்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், அதேநேரத்தில் கோலியையும் கங்குலிக்குப் பெரிதாகப் பிடிக்காது.”
கோலி vs கங்குலி பிரச்னை குறித்து சேத்தன் சர்மா கூறும்போது, “அணிக் கூட்டம் ஒன்றில் விராட் கோலி சொன்ன விஷயத்துக்கு எதிராக கமென்ட் அடித்தார் பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி. அப்போது முதல் இருவருக்குமே தீர்க்க முடியாத பிரச்னை எழுந்துவிட்டது. தன் கப்டன் பதவி பறிபோனதற்கு கங்குலியே காரணமென்று கோலி நினைக்கிறார். கங்குலி எப்போதுமே கோலியை விரும்பியதில்லை!” என்று கூறியிருக்கிறார்.
கோலி கப்டன் பதவியை விட்டு நீக்கப்பட்ட சமயத்தில் அவருக்கும் பி.சி.சி.ஐக்கும் முரண்கள் இருந்தது வெளிப்படையாகவே தெரிய வந்தது. அதுகுறித்தும் சேத்தன் சர்மா பேசியிருக்கிறார்.
“தன்னுடைய கப்டன் பதவி பறிக்கப்பட்டதற்கு பி.சி.சி.ஐ தலைவராக இருந்த கங்குலிதான் காரணம் என கோலி நினைத்தார். வீடியோ அழைப்பு மூலம் நடந்த அந்தத் தேர்வுக்குழு சந்திப்பில் என்னோடு சேர்த்து மொத்தம் 9 பேர் பங்கேற்றிருந்தோம். அந்தச் சந்திப்பில் கோலியின் கப்டன்சி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி ஒரு முறை கங்குலி கேட்டிருக்கக்கூடும். அதை கோலி கவனிக்காமல் விட்டிருக்கலாம் என நினைக்கிறேன்” என்றிருக்கிறார் சேத்தன் சர்மா.
“இந்த சமாச்சாரங்களுக்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கப்டன்சி விலகல் முடிவை கங்குலி மறுபரிசீலனை செய்யச் சொல்லவில்லை என கோலி பேசியிருந்தார். கோலி பொய் சொல்வதாக கங்குலி கூறினார். ஆனால், கோலி ஏன் அப்படிச் சொன்னார் என்பதை இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை!” இவ்வாறும் சேத்தன் சர்மா கூறியிருக்கிறார்.
சமீப காலமாகவே டி20 கிரிக்கெட்டில் சீனியர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, புதிய முகங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எதிர்கால இந்திய அணி யார் தலைமையில் செயல்படும், அந்த அணியில் ரோஹித் மற்றும் கோலியின் இடம் என்ன என்பது குறித்தும் சேத்தன் சர்மா பேசியிருக்கிறார்.
‘‘இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவே கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு கொடுத்தோம். டி20 அணியில் இனி ரோஹித் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவார். ஹர்திக் பாண்டியாவே கப்டனாக ஆவார்” என்று தெரிவித்துள்ளார்.
வீரர்களின் உடல்நிலை சார்ந்துமே அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது வழக்கம். அது குறித்தும் சேத்தன் சர்மா பேசியிருக்கிறார்.
“ஜஸ்பிரித் பும்ராவால் தன் முதுகை வளைக்கக்கூட முடியவில்லை. அவரைப் போன்றே காயமடைந்த சில வீரர்கள் தனியாக சில ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டு முழு உடற்தகுதியுடன் இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். முழுமையான உடற்தகுதியை எட்டாத வீரர்கள் இப்படியாக ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டு 80% உடற்தகுதியோடு கூட ஆடியிருக்கின்றனர்” என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.
இந்திய அணியில் ரோஹித் சர்மாவும் ஹர்திக் பாண்ட்யாவும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும், இருவரும் பல முறை தனது வீட்டிற்கு வந்து சென்றிருப்பதாகவும் சேத்தன் சர்மா தெரிவித்திருக்கிறார்.
இத்தகைய தகவல்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இது குறித்து பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.