இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அறிவித்து அதற்கான வேட்புமனுக்கையும் கோரி தேர்தல் திகதியையும் அறிவித்ததன் பின்னர் தேர்தலிற்கு அவசியமான நிதியை ஒதுக்கீடுசெய்யாமல் அரசாங்கம் காலம் தாழ்த்துவதானது ஜனநாயக உரிமை மறுப்பாகும் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனை பகுதியில் தேர்தல் களப்பணியில் ஈடுபட்டிருந்த அவர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி கருத்தினைத் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை சுயாதீனமாக நடாத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டுதல் வேண்டும். பிரச்சார செலவுகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் பாராளமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில்தான் தேர்தல் செலவுகளுக்கு என ஒரு ஒதுக்கீட்டினையும் செய்வதாக கடந்த வரவு செலவுத் திட்டத்திலே அரசாங்கம் அறிவித்தது. அப்போது குறை நிரப்புப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் அதனை ஆணைக்குழுவக்கு பெற்றுக் கொடுத்து நாட்டு மக்களின் ஜனயாக உரிமையை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அறிவித்து அதற்கான வேட்பு மனுக்கையும் கோரி தேர்தல் திகதியையும் அறிவித்ததன் பின்னர் தேர்தலிற்கு அவசியமான நிதியை ஒதுக்கீடு செய்யாமல் அரசாங்கம் காலம்தாழ்த்துவதானது ஜனநாயக உரிமை மறுப்பாகும். இதனை கண்டிப்பதோடு மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.