கிளிநொச்சி வட்டக்கச்சி விநாயகர் வீதியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் பிரதேச சபை முன்பாக கூடினர்.
குறித்த வீதியில் உள்ள 17 குடும்பங்களின் நாளாந்த போக்கு வரத்துக்கு குறித்த வீதி உகந்ததாக இல்லை எனவும், 2010 மீள்குடியேறிய காலம் முதல் அவ்வீதியை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிய போதும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியை விஸ்தரிப்பதற்கு 3 காணி உரிமையாளர்கள் தடையாக இருந்த நிலையில், ஒருவர் விட்டுக்கொடுத்ததாகவும், ஏனைய இருவரும் ஒத்துழைக்காத நிலையில், முறையாக விஸ்தரித்து அபிவிருத்திக்கான நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது கரைச்சி பிரதேச சபையினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சுமார் 650 மீட்டர் தூரம் மாத்திரமே விஸ்தரிக்கப்பட வேண்டி உள்ளதாகவும், ஏனைய பகுதி புனருத்தானம் மாத்திரமே செய்யப்பட வேண்டி உள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கரைச்சி பிரதே சபைக்கு சொந்தமான குறித்த வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து இதன் போது தவிசாளர் வேழமாலிகிதனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
குறித்த வீதியில் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் என பல்வேறுபட்டவர்கள் பயன்படுத்துவதுடன், மழை காலங்களில் அவ்வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதுண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காலநிலை சீராக இருந்தால் குறித்த வீதியை எதிர்வரும் வார இறுதி நாட்களில் சீர் செய்து தருவதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.