அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற செயற்பாட்டாளர்களினால் மீட்கப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபாவை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (08) நிராகரித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 431வது பிரிவின்படி, அத்துடன் இலஞ்ச ஊழல் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தப் பணம் குறித்து விசாரணை நடத்துவது நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என்று கூறி மனுவை நீதவான் நிராகரித்தார். .
இந்த பணம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், குறித்த பணத்திற்கு வேறு யாரும் உரிமை கோராவிட்டாலும் பணத்தை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் நீதவான் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர, பணத்திற்கு வேறு எந்த தரப்பினரும் உரிமை கோராத காரணத்தினால் பணத்தை தனது கட்சிக்காரருக்கு வழங்குமாறு கோரியிருந்ததை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.