துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பூகம்பம் அந்நாடுகளை நிலைகுலைய செய்துள்ளது. இதுவரை 3,800 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி உள்ளிட்ட தடங்கல்கள் வந்தாலும், இரவு முழுவதும் மீட்புப்பணி தொடர்ந்தது.
துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டிடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் அடங்கும்.
நிலநடுக்கம் மையம் கொண்ட காசியான்டேப் சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அதனால் துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துருக்கியில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பு கணித்திருக்கிறார் டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர்.
ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் என்ற அவர், துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படும் என்று மூன்று நாள்களுக்கு முன்பே கணித்து அதை பெப்ரவரி 3ஆம் திகதி ருவீட்டும் செய்துள்ளார். பெப்ரவரி 3 அன்று அவர் பகிர்ந்த ருவீட்டில், “மத்திய மற்றும் தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று வரைபடத்துடன் கூறியிருந்தார்.
அவர் கணித்து கூறியதுபோலவே, நேற்று காலை துருக்கி – சிரியா எல்லையில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ், SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். துருக்கி நிலநடுக்கத்தால் தனது மனது நிம்மதியை இழந்துள்ளது எனக் கூறியுள்ள இவர், “நான் முன்பே கூறியது போல், 115 மற்றும் 526ஆம் ஆண்டுகளைப் போலவே இந்த பிராந்தியத்தில் கூடிய சீக்கிரத்தில் அல்லது தாமதமாகவோ பூகம்பம் நிகழும்.
இந்த நிலநடுக்கங்கள் எப்போதுமே முக்கியமான கிரக வடிவவியலால் ஏற்படுகின்றன. மத்திய துருக்கி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கூடுதலான வலுவான நில அதிர்வு நடவடிக்கைகளைக் கவனியுங்கள். ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு, நில அதிர்வுகள் பொதுவாக சிறிது நேரம் நீடிக்கும்” என்று நிலநடுக்கத்துக்கு பிந்தைய தனது பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.