யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் பெப்ரவரி 13ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளது.
யாழ் மாநகரசபை முதல்வர் பதவியிலிருந்து வி.மணிவண்ணன் விலகிய பின்னர், புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றது. இதில் போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லையென குறிப்பிட்டு, கூட்டத்தை ஒத்திவைத்திருந்தார் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர்.
எனினும்,ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ் மாநகர சபையின் முதல்வராக இ.ஆனோர்ல்ட் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.
வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் கூட்டத்தை ஒத்திவைத்த பின்னர், அவரே முதல்வர் தெரிவு நடந்ததாக வெளியிட்ட திடீர் அறிவிப்பின் பின்னாலுள்ள மர்மம் பல தரப்பிலும் கேள்வியை எழுப்பியிருந்தது. அரசியல் தலையீட்டினால் இந்த அறிவிப்பு வெளியானதாகவும் தகவல்கள் பரவியிருந்தன.
இந்த நிலையில், யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரியும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது இரு தரப்புகளும் சமர்ப்பணங்களை முன்வைத்தன.
யாழ் மாநகர முதல்வர் , யாழ் மாநகர ஆணையாளர், சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கே.சயந்தன் ஆகியோர் முன்னிலையாகினர்.
சுமந்திரன் தனது வாதத்தில், வழக்கு தொடுனரின் சத்தியக்கூற்றே தவறானது. சத்தியக்கூற்றை முடித்தவர் கூட்டத்திற்கே சென்றிருக்கவில்லை. கூட்டத்திற்கே போகாமல் இப்படியெல்லாம் கூட்டத்தில் நடந்தது என எப்படி அவர் சொல்வார்? தான் கூட்டத்திற்கு போகயில்லை என்பதை கூட சத்தியக்கடதாசியில் முடிக்க முதுகெலும்பில்லாத ஆள் மனுதாரர்.
மிகப்பொய்யான சத்தியக்கூற்றை முடித்துள்ளனர். அன்றைய கூட்டத்தில் 24 பேர் இருந்ததாக சொல்லியுள்ளார்கள். ஆனால், 33 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதன் பிரதி உள்ளது. 33 பேர் கூட்டத்திற்கு வந்தார்கள் என்பதை சொல்லவில்லை. 24 பேர் இருக்கிறார்கள் என பொய் சொல்லியுள்ளனர் என்றார்.
மனுதாரர் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் சார்பில் சட்டத்தரணி திருக்குமரன் சமர்ப்பணம் செய்யும் போது, ஒருவர் கூட்டத்தை ஒத்திவைக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று, இவர்தான் மேயர் என அறிவித்துள்ளார். கூட்டத்தை ஒத்திவைப்பதென்பதன் அர்த்தம், அன்றைய கூட்டத்தின் எந்த தீர்மானமும் செல்லுபடியாகாது என்பதே. பிறகெப்படி மேயர் தெரிவு இடம்பெற்றது என கேள்வியெழுப்பினார்.
முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் சார்பில் அவரே முன்னிலையாகியிருந்தார். அவரது சமர்ப்பணத்தின் போது, 33 பேர் கையெழுத்திட்டதாக சொல்கிறார்கள். அந்த 33 பேர் கையெழுத்திட்டதை ஒரு சத்தியக்கடதாசியாகவே இந்த நீதிமன்றத்திற்கு கொண்டு வர முடியும். அன்றைய கூட்டத்திலிருந்த யாராவது ஒருவர், 33 பேர் கூட்டத்தில் இருந்தனர் என சத்தியக்கூற்றை முன்வைக்க வேண்டும். ஆனால் அந்த சத்தியக்கூற்றை முன்வைக்கக்கூட, அந்த 23 பேரில் ஒருவருக்கு கூட வக்குமில்லை, முதுகெலும்புமில்லை. ஏனெனில் அப்படியொரு சத்தியக்கூற்றை முடிக்க முடியாது. அந்த சபையில் 33 பேர் இருக்கவில்லை. கையெழுத்து வைத்து விட்டு சென்று விட்டனர்.
நான் 31ஆம் திகதி பதவிவிலகினேன். 14 நாட்களிற்குள் முதல்வர் தெரிவு நடந்திருக்க வேண்டும். ஆனால் 19ஆம் திகதியே முதல்வர் தெரிவு நடந்தது. இதுவே விதி மீறல். இந்த மீறலுக்கு காரணம், அந்த காலப்பகுதியில் இழுபறி இருந்தது. முதல்வரை தெரிவு செய்யலாமா, செய்ய முடியாதா என்ற குழப்பமிருந்தது. உள்ளூராட்சி ஆணையாளருக்கு கூட சந்தேகம் இருந்தது.
சட்டவிரோத முதல்வரிற்கு இடைக்கால தடைவிதிக்காமல் விட்டால், இந்த காலப்பகுதியில் நடக்கும் தவறான முகாமைத்துவத்திற்கு நாங்கள் பொறுப்பு சொல்ல வேண்டும் என்றார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, முதல்வரிற்கு இடைக்கால தடைவிதித்தால் சபை நடவடிக்கை குழம்பாதா என கேட்டார்.
மணிவண்ணன் பதிலளிக்கையில், இடைக்கால தடைவிதிக்காவிட்டால்தான் சபை நடவடிக்கை குழம்பும். நான் பதவிவிலகிய பின்னர், புதிய முதல்வர் தெரிவாகும் வரை சபை ஒழுங்காகவே இயங்கியது. பிரதி மேயர், ஆணையாளரின் தலைமையில் ஒழுங்காக நடந்தது. இடைக்கால தடைவிதிக்காவிட்டால்தான் குழம்பும். தவறான முகாமைத்துவம், வரவு செலவு திட்டம் சட்டவிரோதமாகும், அந்த காலப்பகுதியில் நடந்தவற்றிற்கு பொறுப்பு கூற வேண்டியிருக்கும் என்றார்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஓரிரு நாட்களின் முன்னரே தனக்கு கிடைத்ததாகவும், ஆவணங்களை படிக்க காலஅவகாசம் தேவையென அரச சட்டத்தரணி கோரினார்.
இதையடுத்து, வழக்கை பெப்ரவரி 13ஆம் திகதிக்கு தவணையிட்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.