அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே பிணை வழங்கப்பட்ட நிலையில் சிறைச்சாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முதலிகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (31) விடுவிக்கப்பட்டார்.
இந்த தீர்ப்பை அறிவித்த பிரதம நீதவான், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முதலிகேவுக்கு எதிராக எவ்வித குற்றங்களும் காணப்படவில்லை என தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் மூன்று தனித்தனி வழக்குகள் தொடர்பில் முதலிகேவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (1) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை புகையிரத நிலையம், கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு எதிரே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் வசந்த முதலிகேவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் அவர்களால் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
முதலிகே தொடர்பில் பொலிஸாரின் வாக்குமூலங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை தவறாகப் பயன்படுத்தி அவரைத் தடுத்து வைக்கும் வகையில் வழங்கப்பட்டதாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
42 சாட்சி வாக்குமூலங்களைக் கொண்ட சுருக்க அறிக்கையின்படி, வசந்த முதலிகே வழங்கியதாகக் கூறப்படும் வாக்குமூலங்கள் பல மாதங்களுக்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட அதேவேளை, ஏனைய சாட்சியங்கள் ஆதரவளிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வசந்த முதலிகே எந்தவொரு வெளிநாட்டு அல்லது பயங்கரவாத அமைப்புகளிடமிருந்தோ நிதியுதவி பெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வசந்த முதலிகே பொலிசாருடன் கட்டுக்கடங்காத நடத்தையில் ஈடுபடவில்லை என்றும் பொலிஸாரின் அத்தகைய கூற்றுக்களை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வசந்த முதலிகே மேலும் தடுத்து வைக்கப்படுவதற்கு வழிவகுத்த பல்வேறு வாக்குமூலங்களைப் பதிவுசெய்ததுடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் விதிகளை பொலிஸார் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.