கம்பளையிலுள்ள தனியார் வங்கியில் பண வைப்பு இயந்திரத்தை (சிடிஎம்) கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த இருவரை சிறப்பு காவல்துறைக் குழு கைது செய்துள்ளது.
கம்பளை நகரிலுள்ள தனியார் வங்கியின் பண வைப்பு இயந்திரத்தை உடைத்து தூக்கிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் கிட்டத்தட்ட 80 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டது.
கைதானவர்களில் இந்த கொள்ளைச் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்ட சந்தேகநபர்களும் அடங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான சந்தேக நபர் 22 வருடங்களாக இராணுவத்தின் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றியுள்ளார். பன்னல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர் அவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 25 ஆம் திகதி, கே.டி.ஹெச் வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட குழு இந்த கொள்ளையை நடத்தியது.
இந்த கொள்ளைச் சம்பவத்தின் பின்னர் நான்கு மணித்தியாலங்களின் பின்னர் பேராதனை கலஹா சந்தியில் கைவிடப்பட்ட நிலையில் வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
வாகனத்தின் அருகில் சாரதியும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார்.
வாடகைப் பயணம் செல்வதாகக் கூறி பேராதனைக்கு வாகனத்தை கொண்டு வந்ததாகவும், பின்னர் தனது கைகளையும் கண்ணையும் கட்டி, ஒருவரின் பாதுகாப்பில் இறக்கி விட்டதாகவும், பின்னர் சற்று நேரத்தின் பின்னர் அந்த குழுவினர் தன்னை வாகனத்தில் ஏற்றிச் சென்று, கலஹா சந்திக்கு அருகில் வாகனத்துடன் கைவிட்டு, மற்றொரு வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும் சாரதி தெரிவித்தார்.
சாரதி ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்.
சாரதியின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் நிலவியதால், அவர் பல நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.
வாகன வாடகை என்று கூறி இரண்டு முறை அவரது வங்கிக் கணக்கில் ரூ.100,000 பணத்தை கொள்ளையர்கள் வரவு வைத்துள்ளனர். வாட்ஸ்அப் அழைப்பு மூலம் பேராதனைக்கு இந்த வாகனம் வாடகைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
அழைத்த தொலைபேசி எண் மற்றும் வங்கியில் பணம் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கிளை ஆகியவற்றின் மூலம் அறிவியல் பூர்வமான விசாரணைக்கு பின் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை விட்டு சென்றாலும் கம்பளை வங்கியில் திருடப்பட்ட பண வைப்பு இயந்திரத்தை வேறு வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பெரும்பாலும் இந்த இயந்திரத்தை பன்னலக்கு எடுத்துச் சென்று உடைத்து பணம் எடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.
எஞ்சிய சந்தேக நபர்களையும் விரைவில் கைது செய்ய முடியும் எனவும் அந்த இயந்திரத்தை மீட்க முடியும் பொலிஸார் நம்புகின்றனர்.