26 C
Jaffna
December 31, 2024
Pagetamil
தமிழ் சங்கதி

எம்.ஏ.சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து கட்சியை காப்பாற்றுங்கள்; இல்லையேல் கட்சியை இழுத்து மூடுங்கள்: தமிழ் அரசு கட்சி தலைமையகத்தில் பூகம்பம்!

“தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்ததை போல, இலங்கை தமிழ் அரசு கட்சியையும் எம்.ஏ.சுமந்திரன் உடைக்கிறார். அவரை உடனடியாக கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். அவர் கட்சியை சீரழிக்க வந்தவர் என்பது வெளிப்படையாக தெரிந்தும், கையாலாகத்தனமாக இருந்தால், நாம் கட்சியில் இருந்து பலனில்லை. கட்சியை இழுத்து மூடிவிட்டு, அனைவரும் வீட்டுக்கு சென்று தோட்டம் செய்யலாம். அது குடும்பங்களிற்காவது பலனளிக்கும்“.

-இவ்வாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான தொகுதிக்கிளைகள், இளைஞர், மகளிர் அணிகள், மூத்த நிர்வாகிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இதை செய்யாவிட்டால், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா உடனடியாக கட்சித் தலைமையை விட்டு விலகி, வீடு சென்று விட வேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினர்.

இதில், மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனே, தந்தை மீதான அதிக விமர்சனத்தை முன்வைத்து, அவர் செயலற்றிருந்தால், உடனடியாக வெளியேற வேண்டுமென ஆணித்தரமாக தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின்  தொகுதிக்கிளை செயலாளர்கள், இளைஞர், மகளிர் அணி செயலாளர்கள் நேற்று (29) கட்சி தலைமையகமான மார்ட்டின் வீதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்.

எம்.ஏ.சுமந்திரனின் அதிருப்தியால் கட்சியால் நடவடிக்கையெடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி, சில வருடங்களின் பின்னர் நேற்று கட்சிக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் மாவை சேனாதிராசா உரையாற்றிய போது, இளைஞர், மகளிர் அணி கட்டமைப்புக்களை மீள வலுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதன்போது, குறுக்கிட்ட மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி காட்டமான கருத்துக்களை தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு கட்சித்தலைவரின் பேச்சைக் கேட்டு செயற்பட்டு, சுமந்திரன் தரப்பினரால் எவ்வாறு பழிவாங்கப்பட்டேன் என விலாவாரியாக குறிப்பிட்டார்.

“இன்று சொன்னதை போலவே அன்றும் சொன்னீர்கள். இளைஞர், மகளிர் கட்டமைப்புக்களை வலுப்படுத்த சொன்னீர்கள். 2019ஆம் ஆண்டு தைப்பொங்கல் விழாவை நடத்துமாறு கூறி, தை 20ஆம் திகதி நிர்ணயித்தீர்கள். நாங்கள் அதற்கான ஏற்பாட்டை செய்தோம்.

எம்.ஏ.சுமந்திரன் தரப்பில் செயற்படும் மதனி (அப்போது கட்சி மகளிரணி செயலாளர்) திகதியை மாற்றும்படி கேட்டார். எம்.ஏ.சுமந்திரன் வீட்டில் நின்றபடி என்னை தொலைபேசியில் அழைத்து, 20ஆம் திகதி சுமந்திரன் திருகோணமலை போகப்போகிறார். அதனால் பிறிதொரு திகதியை மாற்றுங்கள் என்றார். திருகோணமலையில் ஒரு பொங்கல் நடக்கிறது. அதற்கு சுமந்திரன் போகட்டும். இது யாழ்ப்பாண பொங்கல். திட்டமிட்டபடி நடக்கட்டும் என்றேன். சுமந்திரன் இல்லாத பொங்கலை நடத்தியதற்காக நான் பழிவாங்கப்பட்டேன். இந்த ஒரு காரணத்திற்காகத்தான் நான் பழிவாங்கப்பட்டேன். கட்சித் தலைவரான மாவை சேனாதிராசா என்ன செய்தீர்கள்?

பொங்கல் அழைப்பிதழை சுமந்திரனிடம் கொடுக்கச் சென்ற போது, இதென்ன இளைஞரணி, மகளிரணி என புதுபுது கொப்பு, கிளைகள். எல்லாம் தமிழ் அரசு கட்சிதான் என்றார். தமிழ் அரசு கட்சியில் திடீரென நுழைந்தவருக்கு இளைஞரணி, மகளிரணி எல்லாம் புதுபுது கொப்புகளாகத்தான் தெரியும்.

இன்று உள்ளூராட்சி தேர்தலில் கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளர்கள், யுத்தம் முடிந்த போது இராணுவ நெருக்கடிக்குள் கட்சிக்காக செயற்பட்ட இளையவர்கள் என பலரை, மாவை சேனாதிராசாவின் ஆதரவாளர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள்.

இதையெல்லாம் உங்களால் தடுக்க முடியவில்லை. உங்களின் வாய்மொழி அறிவித்தலை நம்பி எம்மால் செயற்பட முடியாது. எழுத்து மூலமாக அறிவித்தலை தாருங்கள்.

தமிழ் அரசு கட்சிக்கு இப்பொழுது நோய் பிடித்துள்ளது. அது தீர்க்கக்கூடிய நோயல்ல. மரணநோய்“ என்றார்.

இதன்போது, கருத்து தெரிவித்த நிர்வாக செயலாளர் குலநாயகம் (அவர் இப்பொழுது எம்.ஏ.சுமந்திரன் அணி), கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளர்கள் நிராகரிக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கவில்லையே என்றார்.

இதையடுத்து, அப்படி நிராகரிக்கப்பட்டவர்களின் சில பெயர்களை விமலேஸ்வரி குறிப்பிட்டார்.

கட்சியின் பொருளாளர் கனகசபாபதி மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.

“இம்முறை உள்ளூராட்சி வேட்புமனு படிவங்கள் எவையும் கட்சி அலுவலகங்களில் நிரப்பப்படவில்லை. கட்சி தலைமையகத்தில் எந்த ஆவணமும் இல்லை. அனைத்தும் சுமந்திரனின் வீட்டிலேயே நிரப்பப்பட்டது. வேட்புமனுவில் கையெழுத்திட பொதுச்செயலாளர் வருகிறார் என மூத்த நிர்வாகிகள், கட்சி தலைமையகத்தில் காத்திருக்க அவர் எம்.ஏ.சுமந்திரன் வீட்டுக்கு சென்று, அங்கு இரகசியமாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. வேட்பாளர் விபரங்களின் பிரதிகளை 2 நாட்களில் கட்சி தலைமையகத்தில் ஒப்படைப்பதாக சுமந்திரன் சொன்னார். இன்று எத்தனை நாளாகி விட்டது. ஒப்படைத்தாரா? உங்களால் அதை கேட்க முடிந்ததா?

ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்தார்கள்.  இப்பொழுது தமிழ் அரசு கட்சியையும் உடைக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க முடியாதவர்கள் என்றால், பிறகெதற்கு தலைவர் மற்றும் ஏனைய பதவிகள். அனைவரும் கட்சியை இழுத்து மூடிவிட்டு, வீட்டுக்கு சொல்வோம்“ என காட்டாக சொன்னார்.

கூட்டத்திலிருந்த ஒருவர், “இதுதான் கட்சியின் நிலைமையெனில் வீட்டிலிருந்து தோட்டம் செய்தால் குடும்பமாவது பலனடையும்“ என்றார்.

இதேவிதமான குற்றச்சாட்டுக்களை தொகுதிக்கிளை பிரதிநிதிகள் தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டது.

இதன்போது, எழுந்த கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன்- நான் சில விடயங்களை பேசலாமா என்றார்.

தாராளமாக பேசலாம் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அவர் காரசாரமாக பல விடயங்களை சுட்டிக்காட்டினார்.

“வர்த்தகர் சங்கத்தின் பிரதிநிதிகள் தமது தரப்பிலிருந்து சிலரை உங்களிடம் பிரேரித்தார்களா?“ என மாவை சேனாதிராசாவை பார்த்து கேட்டார்.

மாவை தடுமாற்றமாக இருந்தார்.

“நீங்கள் யார்? கட்சித் தலைவர். உங்களிடம் அவர்கள் தொடர்பு கொண்டால், நீங்கள்தானே முடிவெடுக்க வேண்டும். பிறகெதற்கு எம்.ஏ.சுமந்திரனுடனும், சீ.வீ.கே.சிவஞானத்துடனும் பேசச்சொன்னீர்கள்? வர்த்தகர் சங்கத்தினர் வர்த்தகத்தை மட்டும்தான் பார்க்க வேண்டுமென சீ.வீ.கே.சிவஞானம் சொன்னாராம். கட்சித்தலைவரை தவிர்த்து, மற்றையவர்கள் எப்படி இதுபோல பதிலளிக்கலாம்“ என்றார்.

“தமிழ் அரசு கட்சியின் வரலாற்றில் முதல்முறையாக கட்சி அலுவலகத்தில் இல்லாமல் சில பிரமுகர்களின் வீடுகளில் வைத்து தேர்தல் பணி செய்த சம்பவம் இப்பொழுது நடந்துள்ளது. கட்சி தலைவருக்கும் எதுவும் தெரியாது. மாவட்ட வேட்புமனு கட்சி தலைமையகத்தில் நிரப்பப்படவில்லை. சுமந்திரன் வீட்டில் நிரப்பப்பட்டது.

காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவர் மாவை சேனாதிராசா. ஆனால் செயலாளர் சுகிர்தனின் வீட்டில் வைத்துத்தான் அந்த பகுதி ஆவணங்கள் நிரப்பப்பட்டன. அவரது வீட்டுக்கு சென்று கையெழுத்திடுமாறு கூறினர். நான் அங்கு சென்று கையெழுத்திட மறுத்து விட்டேன். கட்சித்தலைவர்தான் என்னை வற்புறுத்தி அங்கு அழைத்துச் சென்றீர்கள். இப்பொழுது வேட்புமனு பிரதிகூட கட்சிக்கு வழங்கப்படவில்லை. இந்த சம்பவங்களிற்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க வேண்டும்.“ என்றார்.

எம்.ஏ.சுமந்திரன் தரப்பினரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கும் வரை, இந்த கட்டமைப்புக்களை சரி செய்ய முடியாது. தொடர்ந்து குழப்பமே நீடிக்கும். ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்காவிட்டால், தமிழ் அரசு கட்சியிலிருந்து கணிசமானவர்கள் வெளியேறுவோம் என்றும் கலையமுதன் எச்சரித்தார்.

கட்சி தலைமையகத்தில் இப்படி அசம்பாவிதம் நடந்து கொண்டிருந்த போது, மாவை சேனாதிராசா பதிலளிக்க முடியாமல் மௌனமாகவே இருந்தார்.

உள்ளூராட்சி வேட்பாளர்களிடம், 2 வருடம் மட்டுமே பதவியில் இருப்போம் என சில பகுதிகளில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது, இது எல்லாம் கட்சிக்குள் முடிவெடுக்கப்படவில்லை. கட்சித் தலைவர் அதை அனுமதித்தீர்களா என கூட்டத்தில் இருந்தவர்கள் கேள்வியெழுப்பினர்.

அப்படியொரு முடிவும் எடுக்கப்படவில்லையென தெரிவித்த தலைவர் மாவை சேனாதிராசா, அப்படி சம்பவம் நடந்ததையே அறிந்திருக்கவில்லையென்றார்.

பின்னர் எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது.

எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவணி என கருதப்படும் தென்மராட்சி, பருத்தித்துறை கிளை செயலாளர்கள் உள்ளிட்ட சில சிலர் கூட்டத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை.

What’s your Reaction?
+1
1
+1
5
+1
0
+1
1
+1
0
+1
2
+1
1

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

உட்கட்சி மோதலால் திண்டாடும் ரெலோ!

Pagetamil

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

Pagetamil

Leave a Comment