25.4 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இந்தியா

பழமையான மொழி தமிழ் என்ற கர்வம் வேண்டும்: பிரதமர் மோடி

நாடு முழுவதும் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுடன் ‘பரிட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘‘நமது தமிழ்மொழிதான் உலகின் மிகவும் பழமையான மொழி. இதில் நமக்கு கர்வம் இருக்க வேண்டாமா? இது நம் நாட்டில் இருக்கும் பெரிய சொத்து, கவுரவம்’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

நாடு முழுவதிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி, அவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் ‘பரிட்சா பே சர்ச்சா'(தேர்வும் தெளிவும்) என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், 6-வது ‘பரிட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சி டெல்லி டால்கட்டோரா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். நாடு முழுவதிலும் இருந்து காணொலி வாயிலாகவும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழக மாணவி முதல் கேள்வி: இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 38.80 லட்சம் பேர் பங்கேற்றனர். அதிகபட்சமாக தமிழக மாணவ, மாணவிகள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதை வரவேற்கும் விதமாக தமிழகத்தில் இருந்து முதல் கேள்வி எழுப்பப்பட்டது. மதுரை கேந்திரிய வித்யாலயா எண்-2 பள்ளி மாணவி அஸ்வினி, காணொலி வாயிலாக பிரதமரிடம் முதல் கேள்வியை முன்வைத்தார். டெல்லியின் நவ்தேஜ், பாட்னாவின் பிரியங்கா குமாரியும் இதேபோன்ற கேள்வியை எழுப்பினர். கேள்விகளுக்கு பதில் அளித்து பிரதமர் கூறியதாவது:

பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால், குடும்பத்தினர் அதிருப்தி அடைவார்களே, இதை எப்படி எதிர்கொள்வது?

பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று குடும்பத்தினர் எதிர்பார்ப்பது இயல்பு. அதில் தவறு இல்லை. கிரிக்கெட் போட்டிதான் இதற்கு சரியான உதாரணம். மைதானத்தில் ‘சிக்ஸர்’ அடிக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோஷமிடுவார்கள். ஆனால், கிரிக்கெட் வீரரின் கவனம் கொஞ்சமும் சிதறாது. அவரது முழு கவனமும் பந்து மீது மட்டுமே இருக்கும். பந்தின் தன்மையைப் பொருத்து மட்டையை சுழற்றுவார். இதேபோல, மாணவர்களும் எவ்வித அழுத்தத்துக்கும் ஆளாகாமல், பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும். அதேநேரம், பெற்றோர் தங்கள் எதிர்பார்ப்புகளை பிள்ளைகள் மீது சுமத்த கூடாது.

தேர்வு எழுதும்போது நேர மேலாண்மையை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?

வாழ்க்கையில் நேர மேலாண்மை மிகவும் முக்கியமானது. இது பொதுத் தேர்வுக்கும் பொருந்தும். மாணவ, மாணவிகள் அனைவரும் நேர மேலாண்மையை உங்கள் அம்மாவிடமே கற்றுக் கொள்ளலாம். ஒரு தாய் தனது வீட்டுப் பணிகளை சுறுசுறுப்பாக குறித்த நேரத்தில் செய்து முடித்துவிடுவார். அவர் சோர்வடைவதே கிடையாது. ஓய்வு நேரத்தில்கூட ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டு இருப்பார். தேர்வுக்கு தயாராகும்போது எந்த பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், தேர்வு எழுதும்போது எந்த கேள்விக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் நாம் முன்கூட்டியே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

பொதுத் தேர்வில் முறைகேடுகளை எவ்வாறு தடுக்கலாம்?

தேர்வு அறையில் கண்காணிப்பாளரை ஏமாற்றி முறைகேடுகளில் ஈடுபடுவது மிக மோசமான அணுகுமுறை. சில டியூஷன் மையங்கள் தங்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக தவறிழைக்க தூண்டுகின்றனர். தவறான பாதையை, குறுக்கு வழியை மாணவர்கள் ஒருபோதும் தேர்ந்தெடுக்க கூடாது. குறுக்கு வழியில் செல்வோர் சில தேர்வுகளில் வெற்றி பெறலாம். ஆனால் வாழ்க்கையில் தோல்வி அடைவார்கள். எனவே, நேர்வழியில் மட்டுமே செல்ல வேண்டும்.

கடின உழைப்பு, புத்திசாலித்தனமான உழைப்பு–இதில் எது சிறந்தது?

குடத்தின் அடியில் இருந்த தண்ணீரை குடிப்பதற்காக, புத்திசாலித்தனமாக கற்களை அதில் போட்ட காகத்தின் கதை உங்களுக்கு தெரியும். அதேபோல, ஒரு மெக்கானிக் கதையையும் கூற விரும்புகிறேன். ஒருவர் ஜீப்பில் பயணம் செய்தார். வழியில் ஜீப் பழுதானது. அவர் கடினமாக போராடியும் ஜீப்பை இயக்க முடியவில்லை. ஒரு மெக்கானிக் வந்தார். 2 நிமிடங்களில் பழுதை நீக்கிவிட்டு, ரூ.200 கட்டணம் கேட்டார். ஜீப் ஓட்டுநர், ‘‘2 நிமிட வேலைக்கு 200 ரூபாயா?’’ என்றார். அதற்கு மெக்கானிக், ‘‘50 ஆண்டு அனுபவத்தால்தான் 2 நிமிடங்களில் சரிசெய்ய முடிந்தது. அதற்குதான் இந்தகட்டணம்’’ என்றார். எனவே, புத்திசாலித்தனத்துடன் கடினமாக உழைக்க வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதள அடிமைத்தனத்தில் இருந்து மீள்வது எப்படி?

ஸ்மார்ட்போன்களைவிட மாணவர்கள் ஸ்மார்ட் ஆனவர்கள் என நம்புகிறேன். ஸ்மார்ட்போன்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். எனினும் சிலர் ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதளம் என தினமும் 7 மணி நேரம் ஸ்மார்ட்போனில் மூழ்கி கிடக்கின்றனர். ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக வாழ்கின்றனர். அவர்களுக்கு ஓர் அறிவுரை கூறுகிறேன். வாரத்தில் ஒருநாள் எந்தவொரு மின்னணு சாதனத்தையும் பார்க்காமல் ‘டிஜிட்டல் விரதம்’ இருக்க வேண்டும். இந்த விரதத்தை படிப்படியாக அதிகரித்தால், அடிமைத்தனத்தில் இருந்து மீள முடியும்.

நாம் அதிக மொழிகளை கற்க முடியுமா?

இந்தியாவில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. இதை நாம் கர்வத்துடனே கூறலாம். இவை நமது பாரம்பரியம், கலாச்சாரத்துடன் இணைந்தவை. ஒரு மொழி என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து பலம் பெறுகிறது. ஏறுமுகம், இறங்குமுகம் ஆகியவற்றை எதிர்கொண்டு, பல தடைகளை தாண்டி அந்த மொழி சக்திவாய்ந்ததாக மாறுகிறது. புதிய மொழி கற்பதால், அதன் பின்னணியில் உள்ள பல ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். எனவே, சுமையாக கருதாமல் புதிதாக மொழிகளை கற்க வேண்டும்.

உலகின் மிகவும் பழமையான மொழி இந்தியாவில் பேசப்படுகிறது. எது தெரியுமா? அது நமது தமிழ் மொழி. இதுதான் உலகின் மிகவும் பழமையான மொழி. இவ்வளவு பெரியசொத்து, கவுரவம் நமது நாட்டில் இருக்கிறது. இதில் நமக்கு கர்வம் இருக்க வேண்டாமா?

ஐ.நா. சபையில் பேசியபோது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை தமிழில் பேசினேன். உலகில் உள்ள அனைத்து மொழிகளையும்விட பழமையானது நம் நாட்டின் தமிழ் மொழி என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் அப்படி பேசினேன். நம் தாய்மொழியை தவிர இந்தியாவின் இதர மொழிகளில் சில வார்த்தைகளாவது கற்பது அவசியம். மொழியை கற்கும் திறன், குழந்தைகளிடம் அதிகம். எனவே, மொழிகள் கற்பதை சிறுவயதில் இருந்தே ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

மாணவர்கள் ஆர்வம்: கடந்த 2018-ல் நடந்த முதலாவது ‘பரிட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் சுமார் 22 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த எண்ணிக்கை 2019-ல் 58 ஆயிரம், 2020-ல் 3 லட்சம், 2021-ல் 14 லட்சம் என உயர்ந்தது. கடந்த 2022-ல் பங்கேற்றவர்களைவிட 146 சதவீதம் அதிகரித்து, இம்முறை 38 லட்சத்து 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

‘பரிட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பங்கேற்க, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், வர்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதிலும் மிக அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் காரணமாக, அடுத்த ஆண்டில் பிரதமர் மோடியின் 7-வது ‘பரிட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியை தமிழகத்தின் ஏதாவது ஒரு நகரில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் உடனான கலந்துரையாடலின்போது, அகமதாபாத், சண்டிகரை சேர்ந்த மாணவர்கள், ‘‘எதிர் தரப்பில் இருந்து வரும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?’’ என்று அரசியல் சார்புள்ள கேள்வியை எழுப்பினர்.

அதற்கு பிரதமர், ‘‘பாடத் திட்டத்துக்கு வெளியில் இருந்து (அவுட் ஆஃப் சிலபஸ்) கேள்வி கேட்கிறீர்களே, இது முறையா?’’ என்று புன்முறுவலுடன் கேட்டார். தொடர்ந்து பதில் அளித்த பிரதமர், ‘‘குடும்பத்தினர், நண்பர்கள் விமர்சிப்பதை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உங்கள் நன்மைக்காகவே விமர்சனம் மூலம் ஆலோசனைகளை கூறுகின்றனர். அதேநேரம், மற்றவர்கள் விமர்சிப்பதை கவனத்தில் கொள்ளக் கூடாது. ஜனநாயகத்தில் விமர்சனம் அவசியம். விமர்சனத்தால் அழுக்குகள் மறைந்து தூய்மையாகும்’’ என்றார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment