பெங்களூருவில் உள்ள மகாதேவபுராவில் நேற்று முன்தினம் மாலை மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமியின் ஷங்கராந்தி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமி பேசுகையில், ”நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் நிரந்தர தீர்வு காண்பதில்லை. மகாதேவபுரா தொகுதியில் ஆண்டுதோறும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. சாலைகள், பாதாள சாக்கடைகள், கால்வாய்கள் மோசமான நிலையில் இருக்கின்றன.
வெள்ளம் வந்தால் மட்டுமே அரசியல்வாதிகள் இங்கு வருகின்றனர். மற்ற நேரத்தில் இங்கு வருவதில்லை. அரசியல்வாதிகள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முயற்சிப்பதில்லை. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. தேர்தல் நேரத்தில் வெற்று வாக்குறுதிகளை மட்டும் அளிக்கின்றனர்” என அரசை விமர்சித்தார்.
இதனால் கோபமடைந்த முதல்வர் பசவராஜ் பொம்மை மடாதிபதியின் கையில் இருந்து மைக்கை பிடுங்கினார். அவர் தொடர்ந்து பேசுகையில், “நான் வெற்று வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதி அல்ல. நான் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கும் அரசியல்வாதி. இங்குள்ள பிரச்சினையை தீர்க்க நிதி ஒதுக்கியுள்ளேன்” என்றார்.
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மடாதிபதியிடம் முதல்வர் மைக்கை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.