யாழ் நகரில் உள்ள பிரபல ஹொட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்த இளம் ஜோடியை இரகசிய கமரா மூலம் வீடியோ பதிவு செய்த ஹொட்டல் பணியாளர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை தென்பகுதியை சேர்ந்த இளைஞனும், வவுனியாவை சேர்ந்த இளம் யுவதியும் அந்த ஹொட்டலில் அறையெடுத்து ஒன்றாக தங்கியிருந்துள்ளனர்.
நள்ளிரவில் ஏசிக்கு அருகில் உள்ள சிறிய துவாரம் ஊடாக கமரா மூலம் வீடியோ படம் பிடிக்கப்படுவதையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் வெளியில் சென்று பார்த்த போது, அதே தளத்தில் உள்ள மற்றொரு அறையின் கதவு சடுதியாக மூடப்படுவதை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் ஹொட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தனர். எனினும், யாரும் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த இளம் ஜோடி, ஊழியர்களுடன் தர்க்கப்பட்டனர். இதையடுத்து, சந்தேகத்திற்குரிய அறையின் கதவை ஹொட்டல் பணியாளர்கள் திறந்த போது, அதற்குள் ஹொட்டல் பணியாளர் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
அவரது தொலைபேசியை வாங்கி சோதனையிட்ட போது, இளம்ஜோடி நெருக்கமாக இருந்த காட்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது உறுதியானது.
இதையடுத்து, அறையில் தங்கியிருந்த இளம்ஜோடி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இளம் ஜோடியை இரகசியமாக படம் பிடித்த ஹொட்டல் ஊழியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த ஹொட்டலிற்கு செல்லும் ஜோடிகளிற்கு சில அறைகள் மாத்திரமே வாடகைக்கு வழங்கப்படுவதாகவும், அதனால் நீண்டகாலமாக இவ்வாறு இரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பொலிசார் அது பற்றி விசாரித்து வருகிறார்கள்.