உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகரசபை வேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் பத்திரிகையாளர் வித்தியாதரனும் போட்டியிடவுள்ளார்.
அவரை களமிறக்க எம்.ஏ.சுமந்திரன் அணி விரும்பிய நிலையில், வித்தியாதரனும் அதற்கு லிருப்பம் தெரிவித்துள்ளார்.
அவரை முதல்வராக்குவதே சுமந்திரன் தரப்பின் விருப்பமாக காணப்படுகிறது. வித்தியாதரனும் அதையே விரும்புகிறார். எனினும், அதில் அவர் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஏனெனில், முன்னாள் முதல்வர் இ.ஆர்னோல்ட்டும் முதல்வர் பதவியை எதிர்பார்த்துள்ளதால், முதல்வர் யார் என்பதை இப்போதைக்கு பகிரங்கப்படுத்துவதில்லையென கட்சியின் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர் வித்தியாதரன், கடந்த சில காலமாக எம்.ஏ.சுமந்திரன் புகழ்பாடி வந்தார். இதன் பிரதிபலனாக தற்போது அவருக்கு யாழ் மாநகரசபை வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
அவரை முதல்வர் ஆக்கும் இரகசிய திட்டம் சுமந்திரன் தரப்பில் இருப்பதாக தெரிகிறது. எனினும், கட்சிக்குள் உத்தியோகபூர்வமாக இது விவாதிக்கப்படவில்லை.
ஏனெனில், யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் இ.ஆர்னொல்ட் மீண்டும் முதல்வராக விரும்புகிறார். அவரை முதல்வராக்க கட்சிக்குள் கணிசமான ஆதரவும் இருக்கிறது.
இந்த நிலையில், இப்போதைக்கு முதல்வர் பற்றி கட்சி பகிரங்கமாக பேசாது என தெரிய வருகிறது.
இவை அனைத்திற்கும் முதலில் வித்தியாதரன் தேர்தலில் வெற்றியடைய வேண்டும்.
வடமாகாணசபை தேர்தல் முதலில் நடந்த போது அதில் முதலமைச்சராக வித்தியாதரன் விரும்பினார். ஆனால் அது கைகூடவில்லை. பின்னர் பாராளுமன்ற தேர்தலை குறிவைத்தார். அதுவும் சரிவரவில்லை. கடைசியில் 5 ஊர்களை கேட்ட பஞ்சபாண்டவர்களை போல, கடந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகரசபை முதல்வர் பதவியை குறிவைத்தார். அப்போது, அவர் வட்டாரமொன்றில் வெற்றியடைவார் என யாரும் நம்பாததால், அவர் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை.
இம்முறையும் அவர் வெற்றியடைவாரா என்பது தெரியவில்லை. அவர் விரும்பிய வட்டாரமொன்றை தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுமென தெரிகிறது. தற்போது,வேட்பாளர் நியமனம் இடம்பெறாத 3 வட்டாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வித்தியாதரன் தெரிவு செய்வார்.
தமிழ் அரசு கட்சி வெற்றியீட்டினால் யார் முதல்வர் என்பதில் கட்சிக்குள் பிடுங்குப்பாடு ஏற்பட்டுள்ளது. வித்தியாதரன் முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. அது தவறானது. தேர்தல் முடிவுகள் வரை யார் முதல்வர் என்பது அறிவிக்கப்படாது.
எவ்வாறாயினும், வித்தியாதரன் தேர்தலில் களமிறங்குவதன் மூலம், இதுவரை அவர் மறைமுகமாக இயங்கி வந்த அரசியல் முகாம் எதுவென்பது பகிரங்கமாகுமென்பது குறிப்பிடத்தக்கது.