யாழ்ப்பாண மாநகர முதல்வர் வேட்பாளர் தெரிவு அடுத்த வாரம் நடைபெறும் போது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் இம்மானுவேல் ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிட முடியாது. உள்ளூராட்சிசபை சட்டவிதிகளின் படி அவரால் இந்த சபையில் மீண்டும் போட்டியிட முடியாது.
யாழ் மாநகரசபையின் புதிய முதல்வர் தெரிவு வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் இம்மானுவேல் ஆர்னோல்ட் களமிறங்கலாமென கூறப்பட்டது.
எனினும், உள்ளூராட்சி சட்டவிதிகளின் படி அவரால் இந்த மாநாகரசபையில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க முடியாது. இரண்டு முறை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து தோல்வியடைந்த ஒருவர் மீண்டும் வேட்பாளராக போட்டியிட முடியாது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து மாகாண ஆளுனர்களிற்கும் தெளிவுபடுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட கடிதத்தில்-
2012ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 7, 12, 17ஆம் பிரிவுகளுக்கு அமைய உள்ளூர் அதிகார சபையொன்றின் வரவு-செலவுத்திட்டம் இரண்டாவது தடவை தோல்வி அடையுமிடத்து அந்த சபையின் மாநகர முதல்வர்/தவிசாளர் தனது பதவியில் இருந்து விலகியதாக கருதப்பட வேண்டும்.
அவ்வாறு பதவியிலிருந்து விட்டு விலகியதாக கருதப்படும் உறுப்பினர் ஒருவர் மீண்டும் அச்சபையின் முதல்வர்/தவிசாளராக நியமிக்கப்பட்டிருப்பின் அதன் மூலம் 2012ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் உத்தேச நோக்கம் மீறப்படுவதாகவும், சனநாயக நிறுவன செயல்முறைக்கு பொருந்தாத நிலை ஏற்படுவதாகவும் அவதானிக்கப்படுவதன் காரணமாகவும் சட்டத்தின் கீழ் கேட்டு விலகியதாக கருதப்படும் ஆள் ஒருவர் சொல்லப்பட்ட பதவிக்கு பொருத்தமற்ற ஒருவராக கருதப்படுவதனால், சொல்லப்பட்ட ஆள் மீண்டும் குறித்த பதவிக்கு நியமிக்கப்பலாகாதென்பது தேர்தல் ஆணைக்குழுவின் முடிவாகும்- என தெரிவிக்கப்ப்டுள்ளது.