வி.மணிவண்ணன் அணியினர், தமது கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை, கட்சியின் அங்கத்தவர்களாக இணைந்துள்ளனர் என்பதை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சில காலத்தின் முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுவரை சுயாதீன தரப்பாக இயங்கி வந்த அவர், கடந்த 9ஆம் திகதி தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளார்.
9ஆம் திகதி யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்திற்கு சென்ற வி.மணிவண்ணன் தரப்பினர், உத்தியோகபூர்வமாக விக்னேஸ்வரனுடன் இணைந்து கொண்டனர்.
எனினும், அன்றைய இரவில், சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.மணிவண்ணன், விக்னேஸ்வரன் தரப்புடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
அவருக்கு முன்பாக கருத்து தெரிவித்த க.வி.விக்னேஸ்வரன், மண்வண்ணன் எமது கட்சியில் இணைந்து விட்டார் என்றுதான் தெரிவித்திருந்தார். எனினும், அதன் பின்னர் கருத்து தெரிவித்த வி.மணிவண்ணன், கூட்டணி அமைத்ததாக தெரிவித்தார்.
எனினும், அவர் கூட்டணி அமைக்கவில்லை, கட்சியில் இணைந்து கொண்டார் என்ற தகவலே உண்மையானது.
வி.மணிவண்ணன் அந்த தகவலை திரித்து கூறியது, தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரான வழக்கு விசாரணையின் காரணமாக என தமிழ்பக்கம் அறிந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வி.மணிவண்ணன் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், அவர் வேறொரு கட்சியில் இணைந்தால், அந்த வழக்கு வலுவிழக்கும் என்பதால், தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்த விவகாரத்தை கமுக்கமாக வைத்திருக்க விரும்பியதாக குறிப்பிடப்படுகிறது.
இதனாலேயே, தமிழ் மக்கள் கூட்டணியில் உறுப்புரிமை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யாமல் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையிலான புதிய கூட்டணி தொடர்பான சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதில், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.வி.விக்னேஸ்வரன், வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய சந்திப்பின் தொடக்கத்தில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம், எந்தெந்த தரப்பினர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என பெயர் குறிப்பிட்டு, தெரிவித்தார். வி.மணிவண்ணன் தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர் என சிவாஜிலிங்கம் குறிப்பிட, அவசரமாக குறுக்கிட்ட க.வி.விக்னேஸ்வரன், மணிவண்ணன் தனித்தரப்பல்ல, தனது கட்சி உறுப்பினர் என்றார்.
இதன் போது சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், மணிவண்ணனை கூட்டணியிலுள்ள மற்றைய கட்சிகளுடன் கலந்துரையாடாமல் இணைத்து விட்டீர்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன், அவர் எமது கட்சியில் இணைந்தார். கூட்டணியில் அல்ல. எமது கட்சியில் இணைப்பதற்கு ஏன் நான் மற்றையவர்களுடன் கலந்துரையாட வேண்டுமென்றார்.
இதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளராக வி.மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.