தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், வி.மணிவண்ணன் அணியும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. நேற்று மாலை இதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது.
ஒரு புதிய கூட்டணி மலர்வது நல்லதுதான். திசைமாறிச் செல்லும் தமிழ் தேசிய கட்சிகளிற்கு கடிவாளமிடும் நகர்வுகள் இவை. ஆனாலும், இதன் பின்னணியிலுள்ள ஒரு அபாயத்தையும் சுட்டிக்காட்டுகிறோம்.
இலங்கை தமிழ் அரசு கட்சியில்- எம்.ஏ.சுமந்திரனின் தன்னிச்சையான நடவடிக்கைகளை சவாலுக்குட்படுத்தியதால், மாகாணசபைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு, விக்னேஸ்வரன் வெளியேறும் நிலைமை உருவாக்கப்பட்டது. சுமந்திரன், விக்னேஸ்வரனுடனான தனது ஈகோவினால், முழு மாகாணசபையும் தோல்வியடைந்தாலும் பரவாயில்லையென ஒரு தவறான முடிவெடுத்து, அவரது அரசியல் சிஷ்யப்பிள்ளைகள் சிலரை வைத்துக் கொண்டு விக்னேஸ்வரனை, மாகாண நிர்வாகத்தை நடத்த விடாமல் அரசியல் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அப்பொழுது விக்னேஸ்வரன், தமிழ் அரசு கட்சியை விட்டு வெளியேறினார்.
அவர் வெளியேறும்போது வைத்த முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று, கட்சிக்குள் ஜனநாயகம் இல்லையென்பது. அந்த குற்றச்சாட்டு உண்மைதான்.
ஆனால், அந்த குற்றச்சாட்டை முன்வைத்த விக்னேஸ்வரன், தனிக்கட்சி அமைத்து, கூட்டணி அமைத்த பின்னர், இன்னொரு சுமந்திரனாகவே செயற்பட்டார் என்பது குற்றச்சாட்டு. அதில் நிறைய உண்மையுள்ளது.
அவரது பல முடிவுகள் கட்சிக்குள், கூட்டணிக்குள் விவாதிக்கப்படுவதில்லை. அதனால் தமிழ் மக்கள் கூட்டணி இன்று சத்தமின்றி செயலிழந்து விட்டது.
வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில், ஜனாதிபதி தெரிவில் விக்னேஸ்வரன் தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தார். அப்போது, அது பற்றி விக்னேஸ்வரனுடன் பேசியபோது, இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டியிருந்தோம். அவர் குற்றச்சாட்டை மறுத்தார். கூட்டணிக்குள் கலந்துரையாடப்பட்டது என்றார்.
கூட்டணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடினீர்களா என வினவியபோது, அப்படி நடக்கவில்லையென்பதை நேர்மையாக ஏற்றுக்கொண்டார்.
ஆனால், தனது முடிவை கூட்டணி கட்சிகளிற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்!
இதுதான் விக்னேஸ்வரனின் கலந்துரையாடல். அதிகபட்ச ஜனநாயகம்.
தற்போது, தமிழ் மக்கள் கூட்டணி பாதியாக உடைந்து விட்டது. அனந்தி சசிதரன் ,கூட்டணிக்கு வெளியில் இருக்கிறார். தமிழ் தேசிய கட்சி (சிறிகாந்தா, சிவாஜிலிங்கம்) கிட்டத்தட்ட வெளியில் இருப்பதை போன்ற நிலைமை. விக்னேஸ்வரன் கட்சி ஆரம்பித்த போது, நம்பிக்கையுடன் கட்சிக்குள் சென்ற பலர் இப்பொழுது கட்சிக்குள் இல்லை.
தமிழ் மக்கள் கூட்டணி கடந்த தேர்தல்களை மீன் சின்னத்தில் எதிர்கொண்டது. இப்பொழுது தமிழ் மக்கள் கூட்டணி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகி, மான் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தனது கட்சியின் சின்னத்தையே, தன்னுடன் கூட்டணியமைக்கும் கட்சிகளும் பயன்படுத்த வேண்டுமென விக்னேஸ்வரன் விரும்புகிறார். மான் அல்லது மீன் சின்னங்களில் ஒன்றுதான் கூட்டணியின் சின்னமாகும். மான் சின்னத்தையே பயன்படுத்தலாமா என பங்காளிகளுடன் பேசப்போகிறேன் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் சில காலமாக ஒரு கூட்டணியின் தலைவராக உள்ளார். தனது கூட்டணிக்குள் புதிய தரப்பொன்றை இணைத்த போது, குறைந்த பட்சம் மற்றைய பங்காளிகளுடன் பேசியிருக்க வேண்டும். ஆனால் அதை விக்னேஸ்வரன் செய்யவில்லை. விக்னேஸ்வரனின் இந்த அணுகுமுறைதான் அவரது கூட்டணியை பெரியளவில் வளரவிடாமல் வைத்துள்ளது.
அவர் அரசியலுக்கு புதியவர். அதனால் அரசியலுக்கு தேவையான இந்த ஜனநாயக மனத்தை படிப்படியாக வளர்த்துக் கொள்வார் என யாராவது நம்பியிருந்திருக்கலாம். ஆனால் அது இன்னமும் வளர்ந்ததை போல தெரியவில்லை.
புதிய கூட்டணியின் ஆயுள்காலத்தை தீர்மானிக்கும் பிரதான விடயமாக, விக்னேஸ்வரனின் தன்னிச்சையான நடவடிக்கைதான அமையுமென்பது மட்டும் நிச்சயம்.