ஊழியர்களின் ஓய்வு காரணமாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் (5) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் தனது கருத்தை வெளியிட்டார்.
ரயில்வே திணைக்கள அதிகாரிகள் ஓய்வு பெறுவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும், அது ஊடகங்களில் வெளியான அளவுக்கு அதிகமாக இல்லை என்று அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக, கடந்த சில நாட்களில் எரிபொருள் விநியோகத்திற்காக அதிக ரயில்களை அனுப்ப வேண்டியிருந்தது, இதன் விளைவாக ரயில்கள் குறைக்கப்பட்டன என்று அமைச்சர் கூறினார்.
ஓய்வு பெறுவதால் ஏற்படும் ரயில் ரத்துகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சர் குணவர்தன கேட்டறிந்தார்.
கடந்த வருட இறுதியில் 10 ரயில் சாரதிகளே ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புகையிரத திணைக்களத்தில் உள்ள திறன்களின் அடிப்படையில் புதிய புகையிரத அட்டவணை பெப்ரவரி மாத தொடக்கத்தில் வழங்கப்படும் என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
“எல்ல-ஒடிஸி” போன்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்ட நீண்ட தூர ரயில் சேவைகளுக்கான டிக்கெட்டுகளை 100% ஒன்லைனில் ஓர்டர் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 2022 ஜூலை 07 இன் 2287/28 வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கும் குழு ஒப்புதல் அளித்தது.