அப்பிள் மொபைல் போன்களை குறைந்த விலையில் தருவதாகக் கூறி சுமார் 500 பேரிடம் இருந்து 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.
29 வயதுடைய சந்தேகநபர் கொழும்பு 15, மாதம்பிட்டிய வீதியில் வசிப்பவர்.
கையடக்கத் தொலைபேசிகளை வழங்குவதாகக் கூறி பணத்தை மோசடி செய்ததாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். .
இந்த நபர் கொள்ளுப்பிட்டியில் கட்டிடமொன்றை வாடகைக்கு எடுத்து அந்த இடத்தில் வியாபாரம் செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நபர் மீது கொள்ளுப்பிட்டி பொலிஸில் மாத்திரம் 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் உள்ளன. கைது செய்யப்பட்ட போது அவர் அந்த வழக்குகளில் ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் இருந்தார்.
அவரது கடை தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், ஒரு வருட காலத்திற்குள் அவர் இந்த நபர்களை ஏமாற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.