சொத்துக்களை அடைவதற்காக வளர்ப்பு தாயாரை அடித்துக் கொன்றுவிட்டு, குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகம் ஆடிய மகனை மாத்தறை பொலிஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மகன் முதலில் தனது தாயாரை தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலால் தாய் இறக்கவில்லை என்பதால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக காண்பிப்பதற்காக உடலை குளியலறைக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
ஜனவரி 5ஆம் திகதி இந்தக் குற்றம் நடந்துள்ளது. 59 வயதான பாத்திமா ஃபரிதா என்பவரே உயிரிழந்தார்.
35 வயது மகன் முகமது மஸ்ரிஃபாசிஸ் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.
இந்த மகனை தாய் தத்தெடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவர் திருமணமாகி கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜனவரி 5ஆம் திகதி மாத்தறைக்குச் சென்று இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.
இந்த தாய் தனது சொத்துக்கள் அனைத்தையும் மகனுக்கு எழுதிவைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாயின் மரணத்திற்குப் பின்னரே தாயின் சொத்துக்கள் தனக்குச் சொந்தமாக இருக்கும் என்பதால், அந்தச் சொத்தை முன்கூட்டியே தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் நோக்கில் தாயை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.