கோழி இறைச்சியை வாங்கி அலசோ அலசு என்று அலசி, திருப்தி ஏற்பட்ட பிறகு அதனை சமைக்கத் தொடங்குவார்கள். ஆனால், அது சரியல்ல அபாயகரமான செயல் என்கிறார்கள் நிபுணர்கள்.
உலகம் முழுவதும் இருக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் வழிமுறைப்படுத்தும் நிபுணர்கள் அனைவருமே இந்த ஒரே கூற்றையே சொல்கிறார்கள்.
கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன்பு, சமையலறையில் வைத்து கழுவக் கூடாது. கோழி இறைச்சியில் இருக்கும் பக்டீரியாக்கள், அதனை அலசும் போது அதிலிருந்து தெறிக்கும் நீர் மூலம் ஒட்டுமொத்த சமையலறைக்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அதாவது, கோழி இறைச்சியை வாங்கி வந்து, அதனை சமைத்துவிட்டாலே போதுமானது. சாப்பிட பாதுகாப்பானது என்கிறார்கள். ஆனால், கோழி இறைச்சியை சமையலறையில் வைத்து சுத்தம் செய்வது அல்லது கழுவுவது என்பது பரவலாக அனைவரும் மேற்கொள்ளும் பழக்கம்தான்.
பெரும்பாலான நாடுகளிலும் இந்தப் பழக்கமே மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அபாயகரமான இந்த பழக்கத்தை மக்கள் கைகொள்வது ஏன்? இறைச்சியிலிருக்கும் பக்டீரியாக்களைக் கொல்கிறோம் என்பது அவர்கள் எண்ணம்.
ஆனால் நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், கோழி இறைச்சியில் இருக்கும் பக்டீரியாக்களும் நுண்கிருமிகளும் வெப்பநிலையில்தான் அழிக்கப்படும். ஒவ்வொரு உணவுப் பொருளிலும் இருக்கும் பக்டீரியாக்கள் அழிக்கப்படும் விதம் குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளில்.
கோழி இறைச்சியை சமையலறையில் கழுவும்போது, அதன் சுற்றுப்புறம் முழுக்க பக்டீரியாக்களால் நிரப்பப்படுகிறது. அதனால் அங்கு சமைக்கப்படும் உணவுகளில் அந்த பக்டீரியாக்கள் கலந்துஅதன் மூலம் உருவாகும் நோய்களின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெறும் அலசுவது மட்டுமல்ல, பலரும் வினிகர் அல்லது எலுமிச்சை சாறால் கோழிக்கறியை அலசிவிட்டு பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இது சரியான அணுகுமுறை அல்ல என்றும், இது பக்டீரியா தொற்றும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
குறிப்பாக, ஒரு பாத்திரத்தில் இறைச்சியை வைத்துவிட்டு அலசுவது கூட பரவாயில்லை. ஆனால், குழாயில் தண்ணீரை திறந்துவைத்துவிட்டு, அதன் கீழே இறைச்சியோடு பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கும் அபாயத்தை நிபுணர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
தண்ணீர் தெறித்து அருகில் இருக்கும் பொருள்கள் மீது பட்டாலே போதும், அங்கு பக்டீரியாக்கள் வாடகைக் கொடுக்காமல் குடியேறிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
ஒரு வேளை, கோழி இறைச்சியை அப்படியே சமைக்க மனம் ஒப்பவில்லை என்று சொல்கிறீர்களா.. அப்போது இவர்கள் சொல்வதைக் கேளுங்கள்..
பாத்திரம் தேய்க்கும் சிங்கில் எந்த பொருளும் இல்லாமல் எடுத்துவிடுங்கள். இறைச்சியை ஒரு சில முறை தண்ணீரை பிடித்து ஊற்றி கழுவுங்கள். அந்த நீரை சிந்தாமல் சிங்கிலேயே விழும்படி செய்யுங்கள். கழுவிய பிறகு, கறியை கழுவும் போது தெளித்த தண்ணீர் திட்டுக்கள் எங்கெல்லாம் விழுந்திருக்கலாம் என்று கருதுகிறீர்களோ அதனை பேப்பர் டவல் எடுத்து துடைத்து குப்பையில் போட்டுவிடுங்கள். இது ஒன்றுதான் சமையலறைக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்.
அதன்பிறகு, உங்கள் கையை நன்கு சோப் போட்டு கழுவிய பிறகே பிற பாத்திரங்களைத் தொட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.