இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ரி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதுள்ளது.
229 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கடந்த முறை சிறப்பான துவக்கம் கொடுத்த நிசாங்க மற்றும் குஷல் மெண்டிஸ் இணை இம்முறை விரைவாகவே ஆட்டமிழந்தது. பவர் பிளே வரை தாக்குப்பிடித்த இந்தக் கூட்டணியை அக்சர் படேல் பிரித்தார். முதல் விக்கெட்டாக குஷல் மெண்டிஸ் 23 ரன்களுக்கு வெளியேற, அடுத்த மூன்று பந்துகளில் நிசாங்கவை 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார் அர்ஷ்தீப் சிங். அடுத்த ஓவரை வீசிய கப்டன் பாண்டியா பெர்னாண்டோவை 1 ரன்னுக்கு நடையைக் கட்ட வைத்தார்.
சிறிது நிலைத்து ஆடிய அசலங்க மற்றும் தனஞ்செயவை முறையே 19 மற்றும் 22 ரன்களுக்கு சஹால் அவுட் ஆக்க ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணி வசம் வந்தது. இதன்பின் வந்தவர்களில் இலங்கை கப்டன் தசுன் ஷனகவை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷனக 23 ரன்கள் எடுத்தபோது அர்ஷ்தீப் சிங் அவரை வீழ்த்த, அதே ஓவரில் கடைசி விக்கெட்டாக மதுஷங்கவையும் ஆட்டமிழக்க செய்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே இலங்கை அணி எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன் தொடரையும் 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இந்தியா இன்னிங்ஸ்: ரொஸ் வென்ற இந்திய அணியின் கப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணிக்கு இஷான் கிஷன் – சுப்மன் கில் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் 1 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த ராகுல் திரிபாதி சுப்மன் கில்லுடன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த, 6வது ஓவரில் ராகுல் திரிபாதி 35 ரன்களுடன் நடையைக்கட்டினார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் இலங்கை பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடிக்க, மறுபுறம் சுப்மன் கில் 46 ரன்களுடன் களத்திலிருந்து வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா இருவரும் சொல்லி வைத்தார் போல தலா 4 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் யாதவின் அதிரடியால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களுடனும், அக்சர் படேல் 9 பந்துகளில் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இலங்கை அணி தரப்பில் தில்சான் மதுஷங்க 2 விக்கெட்டுகளையும், கசுன் ரஜித, ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒருவிக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.