எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் சில தரப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல கட்சிகள் கூட்டணியமைத்தால், போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என கருதப்படும் இரண்டாம் நிலை தமிழ் அரசு கட்சியினர் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர்த்து, இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாடு பலத்த சர்ச்சையை தோற்றுவித்த நிலையில், இது குறித்த இறுதி முடிவை கட்சியின் மத்திய குழுவில் முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இன்று மட்டக்களப்பில் நடக்கும் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில், இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென பெரும்பாலானவர்கள் வலியுறுத்தினர்.
தேர்தலில் தனித்து போட்டியிட்ட பின்னர், ஆட்சியமைக்கும் போது கூட்டமைப்பாக ஆட்சியமைக்கலாம் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.