குருநாகல் வடகடவில் போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கீழ் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மேற்பார்வையில் இரண்டு விசாரணைக் குழுக்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் உடனடியாக உண்மைகளை ஆராய்ந்து பௌத்தத்தின் நிலை மற்றும் வளர்ச்சிக்காக இவ்வாறான செயல்களை தடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.